விதிமுறைகள் மீறி கட்டிய கட்டடம் இடிக்கப்பட்டது
விதிமுறைகள் மீறி கட்டிய கட்டடம் இடிக்கப்பட்டது, சீல் வைக்கப்பட்டது என செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில் தினசரி செய்திகள் பார்த்துகொண்டுதான் இருக்கிறோம். ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களிலோ, அரசு விதிமுறைகளை மீறிய கட்டடங்களோ இப்படி இடிக்கப்படுவதில் நியாயமிருக்கிறது என்று சொல்லலாம். எல்லா மட்டத்திலும் காரியம் சாதிக்கக்கூடிய ஆட்களையே சட்ட விதிமுறைகள் கட்டுப்படுத்தும்போது, அப்பாவிகள் கஷ்டப்பட்டு வாங்கிய இடம் சட்ட விதிமுறைகளுக்குள் உட்படவில்லை என்றால் என்ன செய்வது?
மதுரை திருமங்கலத்திற்கு அருகில் ஓர் இடத்தை வாங்குகிறார் முத்து. பட்டா இடம்தான் என முப்பது வருடத்துக்கு முந்தைய செல்லரித்துப்போன ஒரு பேப்பரை புரோக்கர்கள் காட்டினார்கள். அதை நம்பி இடத்தை வாங்கி, பத்திரத்தையும் பதிவு செய்துவிட்டார். அடுத்து வீடு கட்டலாம் என ஆசையோடு அஸ்திவார வேலைகளை ஆரம்பித்தபோது, வேறொருவர் அது என் இடம் என்று வந்து நின்றார். என்ன ஏதென்று விசாரிக்க, முத்துவின் தலையில் சிலர் மிளகாய் அரைத்திருப்பது தெரிய வருகிறது. பிரச்னைக்கான தீர்வு தேடி இன்று நீதிமன்றத்தின் படிகளை ஏறிக் கொண்டிருக்கிறார் முத்து.
பக்காவாகப் போடப்பட்ட மனைப் பிரிவிலும் சில கோல்மால் நடக்கவே செய்கின்றன. குறிப்பிட்ட சர்வே வரை முறையான அனுமதி வாங்கியிருப்பார்கள். அதற்கடுத்த சர்வே எண்ணில் உள்ள நிலத்தையும் இணைத்துக்கொண்டு அப்ரூவல் ப்ளாட் என அளந்துவிடுவார்கள். நிலத்திற்கு இடையில் வடிகால் அல்லது ஓடை இருக்கிறது என்றால் அனுமதி வாங்கும்போது உள்ளது உள்ளபடி காட்டிவிட்டு, நிஜத்தில் அந்த இடத்தையும் சமப்படுத்தி மனையாக காட்டி ஏமாந்தவர்கள் தலையில் கட்டிவிடுவார்கள். வீடு கட்டும் வரைகூட இந்த வில்லங்கம் தெரியாமலேகூட போகலாம். இந்த மாதிரி தில்லாலங்கடி வேலைகளை எல்லாம் பார்த்து, ரியல் எஸ்டேட்காரர்களே ஏமாற்றுப் பேர்வழிகள்தான் என்கிற முடிவுக்கு வந்துவிட முடியாது. அல்லது எப்படித்தான் மனை வாங்குவது என சோர்ந்து போய்விடவும் கூடாது. மனைப் பிடித்திருக்கிறது, தோதான விலை, வசதிகளும் சௌகர்யமாக இருக்கிறது என்கிறபோது நாம் அடுத்து செய்யவேண்டிய வேலை, அந்த மனைக்குரிய ஆவணங்களைக் கட்டாயம் கேட்டுப் பெற வேண்டும். அந்த ஆவணங்களையும் ஆராய்ந்து எந்தச் சிக்கலும் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்ட பிறகுதான் வாங்கும் முயற்சியில் இறங்க வேண்டும். இந்த ஆவணங்கள்தான் காலாகாலத்துக்கும் சட்டத்தின்முன் செல்லுபடி யாகிற மாதிரி உண்மையாக இருக்க வேண்டும். அப்படி என்ன ஆவணங்களைப் பார்க்க வேண்டும், எந்த ஆவணங்களைக் கேட்டு பெற வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
மூலப் பத்திரம்!
இது மொத்த நிலத்திற்குமான உரிமைப் பத்திரம். வாங்கப்போகும் மனைப் பிரிவு அமைந்துள்ள இடம் யார் பெயரில் உள்ளது, இதற்கு முன் அந்த நிலத்திற்கு உரிமையாளர்கள் யார், அவர்களிடமிருந்து அந்தச் சொத்து கைமாற்றப்பட்ட விவரம் போன்றவை இந்த மூலப்பத்திரத்தில் இடம்பெற்றிருக்கும். இந்தப் பத்திரம் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதைத் தாய்ப்பத்திரம் என்றும் குறிப்பிடுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்களது நிலங்களாக இருந்தால் அனைவரது ஆவணங்களும் இருக்க வேண்டும்.
அதிகாரப் பத்திரம்!
மனைப் பிரிவை விற்பவர் கொண்டிருக்கும் அதிகாரத்தைத் தெரிந்துகொள்ள இந்தப் பத்திரம் வகை செய்கிறது. இதில் குறிப்பிட்டுள்ள இடத்தை மனைப் பிரிவுகளாகப் பிரித்து விற்பனை செய்ய மூலப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள உரிமையாளரால் நிலத்தை விற்பவருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் உறுதிபடுத்திக்கொள்ளலாம். இதை 'பவர் பத்திரம்’ என்றும் சொல்கிறார்கள்.
இந்த அதிகாரப் பத்திரமும் முறையாக பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். சில இடங்களில் அதிகாரப் பத்திரம் வைத்திருப் பவர்கூட வேறொருவருக்கு அதிகாரப் பத்திரம் எழுதித் தந்திருப்பார். கடைசியாக யாரிடம் அதிகாரப் பத்திரம் உள்ளது, அவரிடம் கைமாறிய விவரம் போன்றவை பதிவு செய்யப்பட்ட ஆவணமாக இருக்க வேண்டும்.பட்டா!
குறிப்பிட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்பதைக் குறிக்கும் விதமாக வருவாய்த் துறை அளிக்கும் ஆவணம்தான் பட்டா. மூலப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள உரிமையாளர் பெயரில் இந்தப் பட்டா ஆவணம் இருக்க வேண்டும். நிலம் அமைந்துள்ள வருவாய் வட்டாட்சியரால் இந்த ஆவணம் தரப்பட்டிருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்களது நிலங்களாக இருந்தால் அனைவரது ஆவணங்களும் இருக்க வேண்டும்.
சிட்டா!
மனைப் பிரிவு அமைந்துள்ள நிலத்தின் பரப்பளவு, இதற்குமுன் அந்த நிலத்தின் பயன்பாடு, யாருடைய பயன்பாட்டில் அந்த நிலம் உள்ளது என்கிற விவரங்களை உள்ளடக்கிய ஆவணம் இது. நிலம் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலர் தந்த சான்றின்படி வருவாய் வட்டாட்சியரிடமிருந்து இந்தச் சிட்டா வாங்கப்பட்டிருக்க வேண்டும்.
அடங்கல்!
மனை அமைந்துள்ள நிலத்தின் பரப்பளவு, அந்த ஊரில், அதாவது கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்தப் பகுதியில் உள்ளது போன்ற விவரங்கள் அடங்கிய ஆவணம். கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த சான்றிதழ்படி வருவாய் வட்டாட்சியரிடமிருந்து வாங்கப்பட்டிருக்க வேண்டும்.
வரி ரசீது!
மனைப் பிரிவு அமைந்துள்ள இடம் குறைந்தபட்சம் ஆறு வருடங்கள் காலிமனையாக இருந்திருக்கவேண்டும். இந்தக் காலிமனைக்கு கட்டப்படவேண்டிய வருவாய் வரிகள் முறையாகக் கட்டப்பட்டிருக்கவேண்டும். அப்படி வரிக் கட்டப்பட்டிருந்தால் அதன் ரசீதுகளை பத்திரமாக வைத்திருக்கவேண்டும்.
உள்ளாட்சி அனுமதி!
காலிமனையை மனைப் பிரிவுகளாக மாற்றி விற்பனை செய்வதற்கு வாங்கப்பட்டுள்ள அனுமதி ஆவணம். இது மனை அமைந்துள்ள பகுதியின் உள்ளாட்சி அமைப்பினால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிவிஞிகி) மற்றும் நகர் ஊரமைப்பு இயக்ககத்திடமிருந்து (ஞிஜிசிறி) பெறப்பட்டிருக்க வேண்டும்.
பஞ்சாயத்து அப்ரூவல் மனைப் பிரிவு என்றால் சம்பந்தப்பட்ட ஊராட்சி மூலம் பெறபட்ட அனுமதிக் கடிதம் போன்றவைக் கேட்டுப் பெற வேண்டும்.வில்லங்கச் சான்று!
சம்பந்தப்பட்ட நிலத்தின் மீது எந்த வில்லங்கமும் இல்லை என பத்திரப்பதிவு அலுவலகத்திலிருந்து வாங்கப்படும் ஆவணம். நிலத்தின் நான்கு பக்கத்தின் எல்லை விவரங்களுடன் அந்த நிலத்தின் கடந்தகால மற்றும் தற்போதைய நிலவரங்களை இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும். குறைந்தபட்சம் 30 வருடங்களுக்கு வில்லங்கச் சான்றின் விவரங்கள் இருக்கவேண்டும்.
வழக்கறிஞர் ஒப்புதல்!
மேற்கண்ட ஆவணங்கள் அடிப்படையில் அதன் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் விதமாக வழக்கறிஞர் ஒருவர் கொடுத்துள்ள ஒப்புதல் கடிதம்.
மேற்சொன்ன இந்த ஆவணங்கள் எதிலும் அடித்தல் திருத்தல் இல்லாத வகையில் தெளிவாக இருக்கவேண்டும். இவற்றை ஒன்றாக ஒருசேர வாங்கும்போதுதான் விவரங்களின் உண்மைத்தன்மையை ஆராய முடியும்.
''நம்பிக்கைதான் சார் வாழ்க்கை, நம்பி வாங்குங்க நாங்க எங்கேயும் ஓடிப்போகப் போறதில்லை'' என்று சிலர் நம்பிக்கையோடு பேசலாம். அவர்கள் நம்பிக்கையானவர்களாகவேகூட இருக்கலாம். ஆனால், நீங்கள் வாங்கும் மனையின் உண்மையான முகம் நீங்கள் வைத்திருக்கும் ஆவணங்களே என்பதைத் தயவு செய்து தெரிந்துகொள்ளுங்கள். எனவே, இடம் பிடித்திருக்கிறது என்று உங்கள் மனதில் பட்டதும் அனைத்து ஆவணங்களையும் கேட்டு வாங்கி உங்களுக்கு நன்கு தெரிந்த வழக்கறிஞர் ஒருவரிடம் கொடுத்து அலசி உண்மையை ஆராய்வதே உத்தமம்.
கருத்துகள் இல்லை: