வழிகாட்டி’ என்ற பெயரில் தொடர்ந்து வெளியாகி வரும் கட்டுரைகளின் அடிப்படையில் வாசகர்கள் பலர் கடிதம் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் சந்தேகங்களைக் கேட்டிருந்தனர். அதற்கு பதிலளிக்கிறார் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஓய்வு பெற்ற துணைப் பொதுமேலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன்.

கேள்வி : வீடு விற்றதன் மூலம் கிடைத்த நீண்ட கால மூலதன லாபத்தை ஊரகப் பகுதி மின்னுற்பத்திக் கழகம் (ஆர்.இ.சி.) பாண்டுகளில் முதலீடு செய்வது குறித்து விரிவாகத் தெரிவிக்க முடியுமா?

- எம். லாவண்யா, திருச்சி

பதில் : வருமான வரிச் சட்டம் 54 இ.சி. பிரிவுபடி உங்கள் நீண்ட கால மூலதன லாபத்தை தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.) அல்லது ஊரகப் பகுதி மின்னுற்பத்திக் கழகம் (ஆ.இ.சி.) ஆகிய முதலீடுத் திட்டங்களில் 6 மாதங்களுக்குள் முதலீடு செய்தீர்களேயானால், மூலதன லாப வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால், அவை 3 ஆண்டுகளுக்கான முதலீடாகக் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒருவர், ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரையிலான மூலதன லாபத்தை முதலீடு செய்யலாம். ஆர்.இ.சி. மற்றும் என்.எச்.ஏ.ஐ. பாண்டுகளில் முதலீடு செய்வதற்கு நீங்கள் உங்கள் ஊரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை அணுகினால், இதற்கான ஏற்படுகளை அந்த வங்கி செய்துக் கொடுக்கும்.

கேள்வி : நான் தற்போது எனது வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ.களை கட்டிக் கொண்டு வருகிறேன். என்னிடம் தற்போது ரூ.2 லட்சம் பணம் உள்ளது. இதை வங்கியில் வீட்டுக் கடன் கணக்கில் செலுத்தினால் எனது மாதாந்திரத் தவணைத் தொகையை குறைப்பார்களா? அல்லது கடனைத் திரும்பச் செலுத்தும் கால அளவைக் குறைப்பர்களா?

- எஸ். ராமன், மின்னஞ்சல் மூலமாக

பதில் : நீங்கள் செலுத்த வேண்டிய மாதத் தவணைகளின் எண்ணிக்கையைத்தான் குறைப்பார்கள். மாதாந்தரத் தவணைத் தொகையை வங்கிகள் குறைப்பதில்லை. சமன்படுத்தப்பட்ட தவணைத் தொகை (இ.எம்.ஐ.) ஏற்கனவே உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுவிடுவதால், மாதத் தவணைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வழிமுறை பின்பற்றப்படுகிறது.

கேள்வி : எனக்கு ஏற்கெனவே 2 சொந்த வீடுகள் இருக்கின்றன. மூன்றாவதாக வீடு வாங்கு வதற்கு வங்கிகள் வீட்டுக் கடன் அளிக்குமா?

- வி.ராஜேஷ், சென்னை

பதில் : ஒருவர் வாழ்க்கையில் வீடு என்பது அவசிய அடிப்படைத் தேவை. எனவேதான் வீடு கட்டவும் வாங்கவும் வங்கிகள் கடன் அளிக்கின்றன. எனவே முதல் வீடு கட்ட வங்கிகள் கடன் கொடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இரண்டாவது வீடு கட்டவும் வங்கிகள் கடன் அளிக்கின்றன. அதாவது தனக்காக ஒரு வீடும், வாரிசுகளுக் காக இன்னொரு வீட்டையும் ஒரு குடும்பத்தில் கட்டுவது இயற்கைதானே. எனவே அந்த வகையில் இரண்டாவது வீடு கட்டவும் கடன் கொடுப்பதில் பிரச்சினையில்லை.

ஆனால், மூன்றாவது வீடு வாங்குவதற்கு வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் வங்கிகள் கடன் தருவதில்லை. லாப நோக்கோடு வீடு கட்டக் கடன் கேட்பதாக வங்கிகள் நினைக்கும். அப்படியே நீங்கள் 3வது வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தாலும், அது வணிகக் கடனாகவே கருதப்படும். இதனால் வட்டி விகிதம் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தைவிட அதிகமாக இருக்கும். வீட்டுக் கடனுக்கு அளிப்பது போல தவணைகளும் நீண்ட காலத்துக்கு அளிக்க மாட்டார்கள்.