2022–ம் ஆண்டுக்குள் ‘அனைவருக்கும் வீடு’ என்பதே மத்திய அரசின் குறிக்கோள்:
2022–ம் ஆண்டுக்குள் ‘அனைவருக்கும் வீடு’ என்பதே மத்திய அரசின் குறிக்கோள்: வெங்கையா நாயுடு
பெங்களூர்,
2022–ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள் இருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது என்று வெங்கையா நாயுடு கூறினார்.
மத்திய பாராளுமன்ற விவகாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மந்திரி வெங்கையாநாயுடு பெங்களூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
சட்டம் கடமையை செய்யும்
நில முறைகேடு புகாரில் சிக்கிய ராபர்ட் வதேரா உள்ளிட்ட அரசியல் சார்ந்த எதிராளிகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி எந்த நெருக்கடியும் கொடுக்காது. ஆனால், சட்டம் தனது கடமையை செய்யும். முதலில் நிர்வாகம், செயல்பாடு தான் முக்கியம். அதில் தான் கவனம் செலுத்துவோம். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு நெருக்கடி இருந்தது. ஆனால், எங்களுக்கு அது இல்லை. இதனால் நிர்வாகம் சிறப்பாக இருக்கும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அதிகாரம் மற்றும் பல்வேறு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டது. இதனால் நாடு கேடான நிலைக்கு சென்று விட்டது. இதனால் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு அளித்து உள்ளனர். இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். மாநில அரசுகளுடன் கட்சி சார்ந்து வேறுபாடுகளை காட்ட மாட்டோம். கூட்டாட்சி தத்துவத்தை மனதில் கொண்டு அனைத்து மாநில அரசுகளுடனும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளார். எனவே வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துவோம்.
அனைவருக்கும் வீடு
நாட்டில் அனைவருக்கும் அரசு வேலையை உருவாக்கிக் கொடுக்க இயலாது. தனியார் உதவியுடன் தான் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். எனவே தனியார் துறை, பொதுத்துறை மற்றும் வங்கி, எல்.ஐ.சி. போன்ற அனைத்து துறைகளும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும். மேலும் 2020–ம் ஆண்டுக்குள் ‘அனைவருக்கும் வீடு‘ என்பதை அரசு குறிக்கோளாக கொண்டு உள்ளது. அந்த இலக்கை அடையும் வகையில், தனியார் துறை நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஆலோசிக்க மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், தனியார் மற்றும் பொதுத்துறை அதிகாரிகள் கூட்டத்தை வருகிற 2–ந் தேதி கூட்டி உள்ளேன்.
நகர்ப்புறங்களில் மக்கள் தொகை 1951–ம் ஆண்டு 17 சதவீதமாக இருந்தது. அது தற்போது 32 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதே நிலை நீடித்தால் 2050–ம் ஆண்டுக்குள் நகர்ப்புற மக்கள் தொகை 50 சதவீதமாகி விடும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. எனவே நகர்ப்புறங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் என்னிடம் அறிவுறுத்தி உள்ளார். இதை கருத்தில் கொண்டு நகர்ப்புறங்களில் வீடு, குடிநீர், கழிவறை, போக்குவரத்து, வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம். இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்
கருத்துகள் இல்லை: