கடந்த ஒரு மாதத்தில் பங்கின் விலை 21% உயர்வு ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யலாமா?
சஞ்சய்குமார் சிங்
கடந்த ஒரு மாதத்தில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களின் பங்கு விலை ஒட்டுமொத்தத்தில் 21 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, ‘சென்செக்ஸ்’ வளர்ச்சியை (6.28 சதவீதம்) காட்டிலும் இரண்டு மடங்கிற்கு மேல் அதிகமாகும். இந்நிலையில், இத்துறை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யலாமா? என்பது குறித்து ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வட்டி விகிதம் அதிகரிப்பு
கடனிற்கான வட்டி விகிதம் அதிகரிப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால் கடந்த 2013–ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறை பங்கு குறியீட்டு எண் 34 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. தற்போது இத்துறை நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பிப்ரவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கும், சில்லறை விலை பணவீக்கம் 25 மாதங்களில் இல்லாத அளவிற்கும் குறைந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய், பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றின் இறக்குமதி செலவினம் குறைந்து பணவீக்கம் மேலும் குறையும்.
ரிசர்வ் வங்கி
எனவே, அடுத்த 6–9 மாதங்களில் ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கான வட்டியை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, வீட்டு கடனிற்கான வட்டி விகிதம் குறையும். உச்சகட்ட நிலையிலிருந்து வீட்டின் விலை புதுடெல்லியில் 20 சதவீதம் வரையும், மும்பையில் 8 முதல் 10 சதவீதம் வரையிலும் குறைந்துள்ளது. வீடுகள் விற்பனை அதிகரிப்பதற்கு இவை முக்கிய காரணிகளாக அமையும்.
கடந்த 2012–ஆம் ஆண்டில் வீடுகளுக்கான தேவைப்பாட்டைக் காட்டிலும் அளிப்பு 1.88 கோடி எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடுத்தர வருவாய் பிரிவினர் அதிகரித்து வருகின்றனர். கலாசார மாற்றத்தால் தனியாக குடும்பம் நடுத்துபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் சென்ற சில மாதங்களாக ரியல் எஸ்டேட் துறை, நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கி வருகின்றனர்.
எழுச்சி
ரியல் எஸ்டேட் துறையில் மீண்டும் எழுச்சி ஏற்படும் என இந்தியா இன்ஃபோலைன் நிறுவனத்தைச் சேர்ந்த பாஸ்கர் சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘‘வீடுகள் விலை குறைந்துள்ளன. விரைவில் கடனிற்கான வட்டி விகிதமும் குறைந்து வீடுகள் விற்பனை உயரும். ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்கள் ஈட்டும் லாபத்துடன் ஒப்பிடும்போது பங்கின் விலை குறைவாக உள்ளது. இத்துறை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நகரங்களில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது போன்ற பல்வேறு சவால்கள் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கும் என நிபுணர் ஒருவர் தெரிவித்தார். மும்பை மற்றும் புதுடெல்லியில் விற்பனை குறைந்துள்ள நிலையில் சென்னை, பெங்களூரை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களின் செயல்திறன் நன்றாக உள்ளது. ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களின் பங்குகளில் முதுலீடு செய்ய விரும்புபவர்கள் ரொக்க வரத்து மற்றும் ஆளுமைத் திறன் போன்ற அம்சங்களை சீர்தூக்கி பார்க்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பின்வரும் நான்கு ரியல் எஸ்ட் துறை நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்பு உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓபராய் ரியால்டி
கடந்த மூன்று ஆண்டுகளில் மும்பையைச் சேர்ந்த ஓபராய் ரியாலிட்டி நிறுவனத்தின் வருவாய் மற்றும் நிகர லாபம் ஆண்டிற்கு சராசரியாக 9.77 சதவீதம் மற்றும் 3.25 சதவீதம் உயர்ந்துள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் கடன் சுமை எதுவும் இல்லாத ஒரே நிறுவனம் ஓபராய் ரியால்டி ஆகும். ரொக்க கையிருப்பு இந்நிறுவனத்திடம் அதிகமாக உள்ளது. வீடுகளுக்கான தேவைப்பாடு அதிகரிக்கும்போது இந்நிறுவனம் ஈட்டும் லாபம் சிறப்பான அளவில் அதிகரிக்கும் என எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
பிரெஸ்டீஜ் எஸ்டேட்
பிரெஸ்டீஜ் எஸ்டேட் புராஜக்ட்ஸ் நிறுவனம் தென் மாநிலங்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் இத்துறைக்கு வளமான வர்த்தக வாய்ப்பு உள்ளது. மூன்று ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் நிகர லாபம் முறையே 23.62 சதவீதம் மற்றும் 31.11 சதவீதம் உயர்ந்துள்ளது.
சோபா டெவலப்பர்ஸ்
சோபா டெவலப்பர்ஸ் நிறுவனம் சென்ற 2013–14–ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் நான்கு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நடப்பு 2014–15–ஆம் நிதி ஆண்டில் வருவாய் சிறப்பான அளவில் அதிகரிக்கும் என இந்நிறுவனம் நம்புகிறது. 2016–17–ஆம் நிதி ஆண்டிற்குள் விற்பனையை 75 லட்சம் சதுர அடியாக (ஆண்டுக்கு) உயர்த்த இந்நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் நிகர லாபம் முறையே 18 சதவீதம் மற்றும் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிரிகேட் என்டர்பிரைசஸ் நிறுவனம் பெங்களூரில் குடியிருப்பு பகுதிகளை அமைத்து கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. மூன்று ஆண்டுகளில் வருவாய் மற்றும் நிகர லாபம் ஆண்டுக்கு சராசரியாக 36 சதவீதம் மற்றும் 8.7 சதவீதம் உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் செயல்திறனுடன் ஒப்பிடும்போது பங்கின் விலை குறைவாக உள்ளது
கருத்துகள் இல்லை: