கட்டிட விரிசல்களைத் தவிர்க்க
வீடு போன்ற கட்டிடங்களையும் உறவுகளைப் போலக் கவனமாகக் கையாள வேண்டும். இல்லை எனில் அவற்றிலும் விரிசல் ஏற்படுவது இயல்பு.
பொதுவாகக் கட்டுமானங்களை எழுப்பும்போது செய்முறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கட்டிடத்தில் விரிசல்கள் உருவாகும். உறவுகளை அன்பால் இணைக்கிறோம். கட்டுமானங்களைப் பொறுத்தவரை சிமெண்ட்தான் பலமான இணைப்பை உருவாக்குகிறது. அந்த சிமெண்ட் பூச்சு சரிவரக் கையாளப்படவில்லை எனில் கட்டிடம் நிறைவுபெற்ற சிறிது காலத்தில் விரிசல்கள் வெளித்தெரியத் தொடங்கும். விரிசல்கள் கட்டுமானத்தின் தோற்றத்தைச் சீர்குலைப்பதுடன் கட்டிடம் பழுதாகிவிடுமோ என்னும் அச்சத்தை அதில் வசிப்போரின் மனத்தில் ஏற்படுத்துகின்றன.
ஆனால் எல்லா விரிசல்களும் கட்டிடங்களுக்கு ஆபத்தை உருவாக்குமோ என்பது அநாவசிய அச்சம். ஏனெனில் ஒருசில விரிசல்கள் மேலும் பரவாமல் அப்படியே ஒரே அளவாக இருக்கின்றன.
அதிகமாகப் பரவாமல் ஒன்றுபோல் தோன்றும் இந்த விரிசலை டார்மெண்ட் கிராக் ( darment crack) என்கிறார்கள். இதனால் பெரிய ஆபத்துகள் ஏற்படுவதில்லை. இதற்கு மாறாகச் சில விரிசல்கள் அகலமாகவும் ஆழமாகவும் விரிவடையும். இவை ஆக்டிவ் கிராக் (Active crack) அல்லது ஸ்ட்ரக்சுரல் கிராக் (Strutural crack) என அழைக்கப்படுகின்றன. இவ்வகை விரிசல்கள் அபாயகரமானவை. இவை விரிவடைந்துவந்தால் கட்டிடங்கள் இடிந்து விழக் கூடும்.
ஆழத்தைப் பொறுத்து, திசையைப் பொறுத்து, அகலத்தைப் பொறுத்து பளுவைக் கடத்தும் திறனின் அடிப்படையில் எனப் பல வகைகளாக விரிசல்களைப் பிரிக்கிறார்கள். விரிசல்கள் தோன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.
53 கிரேடு சிமெண்டைப் பூச்சுக் கலவைக்குப் பயன்படுத்தும்போது விரிசல்கள் அதிகமாக உண்டா கின்றன. இது மிக வீரியமுள்ளது. கலவையின் சுருங்கும் தன்மையும் அதிகம். ஆகவே விரிசல்களை அதிகமாக உருவாக்கும். இவ்வகை சிமெண்டைக் கான்கிரீட் தயாரிக்க மட்டும் பயன்படுத்தலாம். மேலும் சிமெண்டை அளவுக்கு அதிகமாக உபயோகப்படுத்தினாலும் விரிசல்கள் உண்டாகும். ஜல்லி மற்றும் மணல் - ஜல்லி, மணல் ஆகிய ஜடப் பொருட்களில் களிமண் அதிகமாகக் கலந்திருந்தால் விரிசல்கள் பன்மடங்கு பெருகுகின்றன.
அதிகமான தண்ணீர் கான்கிரீட்டில் இருக்கும் பட்சத்தில் அதன் விரிசலுறும் தன்மை அதிகரிக்கிறது. சிமெண்ட் பூசிய பின்னர் கட்டிடத்தில் முறையாக நீரூற்றி க்யூர் செய்ய வேண்டும். ஏனெனில் கான்கிரீட் விரைவாக நீர்ப்பதத்தை இழக்கும் இதனால் அது விரைவாகக் காய்ந்து சுருங்கும். சுருங்கும் தன்மை விரைவானால் விரிசல்கள் ஏற்படும். முறையாக நீரூற்றி கான்கிரீட்டின் நீர்ப்பதத்தைப் பராமரித்தால் சுருங்கும் தன்மை குறையும். விரிசல்களும் தோன்றாது.
கான்கிரீட் போடும்போது அதிகப்படியான தண்ணீர் வெளியேறுவது ப்ளீடிங் எனப்படும். இவ்வாறு ப்ளீடிங் அதிகமாக இருந்தால் விரிசல்கள் தோன்றலாம்.
கட்டுமான அஸ்திவாரம் கீழே இறங்குதல், கம்பிகளில் துருப்பிடித்தல், நில நடுக்கம், வாகனங்களின் போக்குவரத்து அதிர்வு ஆகியவற்றாலும் விரிசல்கள் ஏற்படலாம்.
விரிசல்கள் குறித்து விரிவாக ஆராய்ந்த பின்னர் அதன் வகைக்கேற்ப பழுதுநீக்க வேண்டும். ரெஸினை உள் செலுத்துதல், ஊடுருவி அடைத்தல் உள்ளிட்ட 20 வகைகளில் விரிசல்களைச் சரிசெய்யலாம். விரிசலின் தன்மையைப் பொறுத்து கட்டிட நிபுணரின் ஆலோசனையின் பேரில் ஏதேனும் ஒரு பழுது நீக்கும் வழிமுறையைப் பயன்படுத்தி கட்டுமானங்களின் விரிசல்களை நாம் நீக்கிக்கொள்ளலாம்.
வாசகர்கள் கவனத்திற்கு...
இந்தப் பகுதியில் நீங்களும் பங்களிக்கலாம். வீடு வாங்குவது தொடர்பான உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை: