2013ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் துறை சாதகமா, பாதகமா?
2013ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் துறை சாதகமா, பாதகமா?
ஒவ்வொரு ஆண்டு முடியும்போது, அந்த ஆண்டு சிலருக்கு மகிழ்ச்சியையும், இன்னும் சிலருக்குத் துயரத்தையும் சோகத்தையும் கொடுத்திருக்கும். அந்த வகையில் ரியல் எஸ்டேட் துறையினருக்கு 2013ஆம் ஆண்டு மகிழ்ச்சியைக் கொடுத்ததா? அல்லது சவால்கள் நிறைந்த ஆண்டாகக் கடந்ததா?பிறக்க இருக்கும் 2014ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி எப்படி இருக்கும்? இதுபற்றி ரியல் எஸ்டேட் துறையில் பணியாற்றும் கட்டுநர்கள், ரியல் எஸ்டேட் துறை வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?
சென்னை
சிட்டி பாபு, தலைவர் மற்றும் சி.இ.ஓ., அக்ஷயா பிரைவேட் லிமிடெட்
2013ஆம் ஆண்டு மிகப் பிரமாதமாகவே இருந்தது. சென்னையில் வழக்கமாக ரியல் எஸ்டேட் துறையினருக்கு ஏற்ற பகுதிகளாகக் கருதப்படும் ஜி.எஸ்.டி. சாலை, ஓ.எம்.ஆர் தவிர்த்துப் புதிதாக ஒரகடம், வடசென்னை, மாம்பாக்கம், செம்பாக்கம் போன்ற புதியப் பகுதிகளில் சந்தை விரிவடைந்துள்ளது. புதிய புதிய கட்டுநர்கள் இத்தொழிலுக்கு வந்துள்ளனர். அதேசமயம் சிமெண்ட் விலை உயர்வு, மணல் தட்டுப்பாடு, திறமையான வேலை ஆட்கள் குறைவு எனச் சில சவால்களும் இருந்தன. வரும் புத்தாண்டிலும் ரியல் எஸ்டேட் துறை நன்றாக இருக்கும் என்று நம்புகிறோம்.
மதுரை
மணிகண்டன், கட்டுநர்
மதுரை மாநகராட்சியில் இ-பிளானிங் என்ற முறையில் வீடு கட்ட அங்கீகாரம் கொடுக்கிறார்கள். இந்த அங்கீகாரம் வருவதற்கு மிகவும் தாமதமாகிறது. ஊராட்சியை ஒட்டியுள்ள பகுதிகளில் முன்பு கட்டுமானப் பணிகள் நன்றாக நடைபெற்று வந்தன. பல ஊராட்சிப் பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டதால், இப்போது இங்கும் பணிகள் முடங்கி விட்டன. பெரும்பாலான மக்கள் வீட்டுக் கடனை நம்பியே வீடு வாங்குகிறார்கள். உரிய அங்கீகாரத்தைக் காட்டினால்தான் வங்கிகள் கடன் கொடுக்கும். அங்கீகாரம் கிடைக்கத் தாமதமாவதால் வீட்டுக் கடனும் கிடைப்பதில்லை. எனவே பொதுமக்கள் வீடு வாங்கவும் வருவதில்லை. மதுரையில் கட்டிய பல வீடுகள் விற்கபடாமலேயே உள்ளன. இப்போது வேறு வழியில்லாமல் லாபம் கிடைக்காவிட்டாலும் நட்டம் வராத அளவுக்கு வீடுகளை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 2014ஆம் ஆண்டும் இதே மாதிரிதான் இருக்கும் என்று நினைக்கிறோம்.
கோவை
கோவை ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை, கட்டப்பட்ட வீடுகள் விலைக்கு வாங்கிக் குடிவருவது குறைந்து வருகிறது. அப்படியே வந்தாலும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரையிலான குறைந்த பட்ஜெட் விலையில் வீடுகள் வாங்குவதில்தான் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ரூ.70 லட்சம் மதிப்புக்கு மேலான வீடுகள் விலை போவது மிக அரிதாக இருக்கிறது என்கிறார் பெயர் குறிப்பிடாத ஒரு பில்டர்ஸ் நிறுவன மேலாளர். இதற்கு முந்தைய ஆட்சியில் வீடு கட்ட அங்கீகாரம் வாங்க நடைமுறைகள் குறைவு. ஆனால் இப்போது அங்கீகாரம் வாங்க நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆயிரம் சதுர அடியில் வீடு கட்டுவதற்குக் கூடுதலாக ரூ.2 லட்சம் ‘செலவு’ செய்தால்தான் அங்கீகாரம் கிடைக்கிறது. இதனால் சின்னச் சின்னப் பில்டர்கள் இந்தத் தொழிலில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குறைந்த பட்ஜெட் அளவிலான வீடுகள் கட்டி விற்பதும் தற்போது குறைந்து வருகிறது.
சென்ற ஆண்டு தொடக்கத்தில் நடந்த தொழிலில் இந்த வருடம் பாதி கூட நடக்கவில்லை. இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு தொழில் இதை விட மந்தமாகும்.
திருச்சி
தேவராஜ், ரியல் எஸ்டேட் வல்லுநர்
ரியல் எஸ்டேட் தொழில் 2013ஆம் ஆண்டில் மிகவும் மந்த நிலையில் இருந்தது.பொருளாதார மந்தநிலை காரணமாக வேலைவாய்ப்பு இழப்பு, சம்பளக் குறைவு, விலைவாசி உயர்வு எனப் பல காரணங்கள் சொல்லலாம். தற்போது சேமிப்புக் குறைவாக இருப்பதால் நிலம், வீடு ஆகியவற்றில் முதலீடு செய்வது குறைந்துள்ளது.
2009 முதல் 2011 வரை எழுச்சியில் இருந்த ரியல் எஸ்டேட் தொழில் இப்போது வீழ்ச்சியைச் சந்திக்க ஆரம்பித்தது. இந்த வீழ்ச்சி 2015 வரை நீடிக்கும்.
அயல் நாடு வாழ் இந்தியர்கள் பெருமளவு ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்தனர். அவர்களின் சேமிப்பும் குறைந்துவிட்டது. அதனால் வரும் ஆண்டில் எழுச்சி பெற வாய்ப்பே இல்லை.
நெல்லை
தி.த.ரமேஷ், நிர்வாக இயக்குனர், மயன் பில்டர்ஸ்
2013ஆம் ஆண்டில் மனை வாங்குவதில் தேக்க நிலை இருந்தது. தற்போது ரியல் எஸ்டேட் துறை நிலையற்ற தன்மையில் உள்ளது. தற்போது பத்திரப்பதிவும் அதிகரித்துள்ளது. இதனாலும் ரியல் எஸ்டேட் துறை மந்தமாக உள்ளது. வீடு, மனை வாங்குவதை விடத் தங்கத்தில் முதலீடு செய்யவே பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் 2013ஆம் ஆண்டைப் பொருத்தவரை ரியல் எஸ்டேட் துறை நிறைய சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுக்குப் பிறகு தேக்க நிலை மாறும் என்று நம்புகிறோம்.
புதுச்சேரி
எஸ்.தங்கமணி மாறன், துணைத் தலைவர், ப்ராப்பர்டி டெவலப்பர்ஸ் சங்கம்
புதுச்சேரியில் 2013ம் ஆண்டு கட்டுநர்களுக்குக் கடினமான ஆண்டுதான். முதலீடு குறைந்தது. பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் அதிகரிக்கவில்லை. ஏனெனில் புதுச்சேரியில் இடம் மிகக் குறைவுதான். அதனால், இடத்தின் விலை அதிகமாகி வருகிறது. இடம், வீடு வாங்க வருவோர் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் விலையில் பெரிய வேறுபாடு இல்லை எனக் கருதுகிறார்கள்.
கடந்த ஒரு மாதமாகப் பல இடங்களில் பணிகள் நடக்கவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமானப் பணிகள் தேக்கமடைந்துள்ளது. இதற்குக் காரணம் மணல், சிமெண்ட் விலை உயர்வு. கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால் தொழிலாளர்களுக்கு பணியில்லை. வரும் ஆண்டில் தேர்தல் வரவுள்ளது. அதனால் கட்டுமானத்துறையில் வரி குறையும் என எதிர்பார்க்கிறோம்.
(அ.வேலுச்சாமி, அ.சாதிக் பாட்ஷா, கா.சு.வேலாயுதன், ஏ.அருள்தாசன், சி.ஞானப்பிரகாஷ் உதவியுடன் )
கருத்துகள் இல்லை: