ஆதாயம் தரும் கூட்டு வீட்டுக்கடன் திட்டம்
நகர்ப்புறங்களில் பலருடைய சொந்த இல்ல கனவுக்கு கைகொடுக்கும் முதன்மை காரணியாக நிதி நிறுவனங்கள் விளங்குகின்றன. பெரும்பாலான வங்கிகள் வீட்டு கடனை கொடுக்க ஆர்வம் காட்டுகின்றன. அதனால் வீட்டு கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வாங்கும் சொத்து மதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதற்கு ஏற்ப அதிக தொகையை எதிர்பார்க்க வேண்டி இருக்கிறது.
இருந்தாலும் கடன் வாங்குபவர் திருப்பி செலுத்தும் சக்தி, முக்கியமாக வருமானத்தை கணக்கில் கொண்டே கடன் வழங்கப்படுகிறது. ஆகவே கடன் வாங்க முடிவு செய்து விட்டாலே அது சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் ஆராய வேண்டும். குறிப்பாக நமக்கு நன்மை தரும் அம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் வீட்டு கடன் வாங்குவதற்கு கூட்டாக விண்ணப்பிப்பது லாபம் சேர்ப்பதாக இருக்கும்.
அதிலும் வீடு வாங்கப்போகும் கணவனும், மனைவியும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் இந்த கூட்டு வீட்டு கடன் திட்டம் சாதகமாகதாக விளங்கும். இந்த கடன் திட்டத்தின் முதன்மை விஷயமாக அதிக கடன் தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஒரே ஒருவர் மட்டும் பெறும் கடனை விட இது அதிகமாக இருக்கும் என்பதால் வீடு வாங்குவதற்கு தேவையான பணம் ஏறக்குறைய கைக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
அதிக கடன் தொகை கிடைக்கும்
அதாவது அதிக கடன் தொகையை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்ற திட்டம் இது. இருவருடைய மொத்த வருமானத்தின் அடிப்படையில் கடன் கிடைக்கும். ஒருவேளை மனைவி மாத சம்பளம் வரும் வேலையில் இல்லாமல் இருந்தாலும் பிற வருமானங்களின் அடிப்படையிலும் கணவருடன் சேர்ந்து கூட்டாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த கூட்டு கடன் திட்டம் மூலம் இன்னொரு ஆதாயமும் இருக்கிறது.
அது வீட்டு கடன் மீதான வரி சலுகையை பெறுவது ஆகும். பொதுவாக வருமான வரி சட்டம் பிரிவு 80–சியின் கீழ் வீட்டுக்கடனுக்கு ரூ.1 லட்சம் வரை வருமான வரிச்சலுகை கிடைக்கும். அதனால் ரூ.1 லட்சம் அளவிற்கு வீட்டுக்கடனுக்கான தொகையை செலுத்தும்போது பொது வருங்கால வைப்புநிதி, எல்.ஐ.சி. போன்ற வரி இல்லா முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
வரிவிலக்கு
இதுதவிர வீட்டுக்கடனுக்கான வட்டிக்கு வருமான வரி சட்டம் 24–ன் கீழ் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரிச்சலுகையின் மூலம் கூட்டாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தால் கணவன், மனைவி இருவரும் தலா ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை பயன் பெறலாம். அதாவது மொத்தம் ரூ.5 லட்சம் வரை வரியில் இருந்து விலக்கு கிடைக்கும். எனினும் வரிவிதிப்பு கட்டமைப்பு முறை, அது சார்ந்த விஷயங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே கூட்டு வீட்டு கடன் திட்டத்தில் இருவரும் சேர்ந்து ரூ.5 லட்சம் வரை வரிச்சலுகை பெற முடியும்.
அதேபோல் இந்த கூட்டு வட்டி முறையில் வீட்டுக்கு உரிமை கொண்டாடும் நிலையில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதாவது கணவன், மனைவி சேர்ந்து விண்ணப்பிப்பது போல தந்தை, மகன் கூட்டாக சேர்ந்து கூட்டு வீட்டு கடனை பெறலாம். வீட்டின் உரிமையில் சம்பந்தம் இல்லாதவர்களுடன் சேர்ந்து வீட்டு உரிமையாளர் ஒருவர் இந்த முறையில் கடன் பெற முடியாது. வீடு வாங்க அதிக பணம் தேவைப்படுபவர்களுக்கு இந்த கூட்டு வீட்டு கடன் திட்டம் சாதகமாக இருக்கும் என்பது நிதிசார்ந்த நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
ஆதாயம் தரும் கூட்டு வீட்டுக்கடன் திட்டம்
Reviewed by
Tamilan Abutahir
on
3:03:00 PM
Rating:
5
கருத்துகள் இல்லை: