வீட்டை பாதுகாக்கும் நவீன தொழில்நுட்பம்
வீட்டை பாதுகாக்கும் நவீன தொழில்நுட்பம்
பதிவு செய்த நாள் : May 10 | 12:15 am
கட்டுமானத்துறைக்கு வலுசேர்க்கும் விதமாக பலவகையான நவீன தொழில்நுட்பங்கள் புகுந்துக் கொண்டே வருகின்றன. விதவிதமான கான்கிரீட் கலவைகள், மரப்பலகைகள், மின்சார இணைப்புகள் என புதுமைகள் பல நுழைந்துவிட்டன. அந்த வகையில் தற்போது வீட்டினை பாதுகாப்பாக பராமரிக்கும் புதுமையான தொழில்நுட்பமும் கட்டுமானத் துறையில் அடிஎடுத்து வைத்துள்ளது.
கண்காணிக்கலாம்
‘ஹோம் ஆட்டோமேசன்’ என்று அழைக்கப்படும் இம்முறையில் வீட்டின் அனைத்து தகவல்களும், இணைப்புகளும் ஸ்மார்ட் போன்களில் அடங்கப்பெற்று விடுகின்றன. வீட்டில் வசிக்கும் காலங்களிலும், வீட்டை பூட்டி விட்டு வெளியில் செல்லும் காலங்களிலும் இம்மாதிரியான செயல்பாடுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதாவது ஹோம் ஆட்டோமேஷன் என்ற இந்த தொழில்நுட்பமுறையில் வீட்டின் பாதுகாப்பு முறை, தட்பவெட்ப நிலைகள், வீட்டை கண்காணிக்கும் வீடியோ கேமிரா போன்றவற்றின் நிலைகளை நமது கைகளில் இருக்கும் தொழில்நுட்பங்களை கொண்டு எளிதில் பயன்படுத்தலாம். இந்த தொழில்நுட்பம் கணினியில் இருக்கும் மின்னஞ்சல்களை நமது ஸ்மார்ட் போன்களில் இணைத்துக் கொள்ளும் வசதியினை போன்றே உள்ளது.
நாமே இயக்கலாம்
அதாவது நமது வீட்டில் நாம் விளக்குகளை எரியவிட்டுவிட்டு தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது நண்பர்கள் வந்தால் அவர்களுடன் பேசிக் கொண்டே வெளியே செல்ல நேரிடலாம். இம்மாதிரியான சூழ்நிலைகளில் டி.வி. மற்றும் விளக்குகள் போன்றவை இயங்கிக் கொண்டே இருக்கும். மேலும் திடீரென்று வெளியில் செல்லும்போது வீட்டில் இயங்கி கொண்டிருக்கும் மின்சாதன பொருட்களை நிறுத்தாமல் அவசரத்தில் சென்றிருக்கலாம்.
இதனால் மின்சாரம் வீணாவதுடன் சில நேரங்களில் வீட்டில் திருட்டு சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்புகள் உண்டு.
இதனை தடுக்கவே ஹோம் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. திடீரென்று வெளியில் செல்ல நேரிட்டால் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்மார்ட் போன்கள் அல்லது டாப்லேட்டுகள் வழியாக விளக்குகளை அணைத்தல், வீட்டினை பூட்டுதல், வீட்டை வீடியோ கேமிராக்கள் மூலமாக கண்காணித்தல் போன்ற பணிகளை செய்ய முடியும்.
துர்நாற்றத்தை விரட்டும்
ஹோம் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தில் ‘ஒன் டச் ஆக்சஸ்’ என்ற முறையை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் பயன்பாட்டாளர்களின் வீடுகளை ஸ்மார்ட் போன்களில் இருக்கும் பட்டன்களை அழுத்தினாலே போதும். நாம் வீட்டில் செய்ய நினைக்கும் பணிகளை எங்கிருந்தும் செய்துவிடலாம். இந்த தொழில்நுட்பத்தில் வீட்டினை பாதுகாத்தல், பூட்டுதல், விளக்குகளை அணைத்தல் போன்ற பணிகள் மட்டுமின்றி தீ விபத்து தடுப்பு சென்சார், தொலைக்காட்சி, சவுண்ட் சிஸ்டம் இயக்கத்திற்கான சென்சார், நீச்சல் குளத்தின் தகவல்களை வழங்கும் சென்சார் போன்றவற்றை பொருத்தி அவைகளை கண்காணித்துக் கொள்ளலாம்.
இவை வீட்டின் சூழ்நிலையை உணர்த்துவதுடன் பயன்பாட்டாளர் வழங்கும் கட்டளைகளை ஏற்று அதன்படி செயல்படவும் வல்லவை. உதாரணமாக வெளியூர்களுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புபவர்கள் தங்களில் வீட்டில் நிலவும் வெப்பநிலையை அறிந்து கொள்ளலாம். பயணக் காலங்களின் போது மழை பெய்திருந்தால் வீடுகளுக்குள் ஒருவிதமான துர்நாற்றம் வீசக் கூடும். இம்மாதிரியான சூழ்நிலைகளில் இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் ‘எக்கோ மோட்’ என்ற பசுமை முறைக்கு மாற்றினால் வீட்டில் வீசும் துர்நாற்றம் எக்ஸாஸ்டர், ஜன்னல்கள் மூலமாக வெளியேறி விடும்.
கருத்துகள் இல்லை: