', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    முதலீட்டுக்கு ஏற்ற முத்தான இடங்களை தேர்ந்தெடுக்க கவனிக்க வேண்டியவை

    முதலீட்டுக்கு ஏற்ற முத்தான இடங்களை தேர்ந்தெடுக்க கவனிக்க வேண்டியவை

    சென்னை நகரை பொறுத்தவரை புதிய குடியிருப்புகளின் பெருக்கம் புறநகர் பகுதிகளை நோக்கி விரிவடைந்து வருகிறது. நகருக்குள் நெருக்கடியான சூழல் நிலவுவதும், சொத்து மதிப்பு ஏற்றமாக இருப்பது மட்டுமின்றி இடப்பற்றாக்குறையும் புறநகரை நாடி செல்ல காரணமாக இருக்கிறது. அப்படி புறநகரை நோக்கி நகர்வது தவிர்க்க முடியாத காரணமாக அமைந்து விட்ட நிலையில் எந்த பகுதி வசிப்பிடத்துக்கு ஏற்றதாக தென்படுகிறது என்பது பற்றிய அலசல்கள் பல்வேறு தரப்பினரிடமும் விவாதமாக தொடர்கிறது.
    கட்டமைப்பால் விலை உயர்வு
    அதிலும் சொத்து வாங்கும்  மனநிலையில் உள்ளவர்கள் தற்போதைய வசிப்பிட தேவையை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அந்த இடம் எத்தகைய வளர்ச்சியின் பிடியில் இருக்கிறது என்பதை ஆராய வேண்டியது அவசியமாக இருக்கிறது. இடத்தை சூழ்ந்திருக்கும் பகுதிகளில் எந்த மாதிரியான கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றன, இனி அவை மேம்பாடு அடைவதற்கு சாத்தியம் எந்த அளவில் இருக்கிறது என்று பார்க்க வேண்டி உள்ளது. அந்த பகுதியை மற்ற பகுதிகளுடன் இணைக்கும் சாலை வசதியையே வளர்ச்சியின் முதல் படியாக கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.
     ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் சென்னை புறநகரின் அபரிமிதமான வளர்ச்சியில் சாலை கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. சதுர அடி நூறின் மடங்கில் மதிப்பிடப்பட்ட இடங்கள் எல்லாம் இன்று ஆயிரத்தின் மடங்கில் கிடுகிடுவென விலை உயர்ந்து நிற்பதற்கு கட்டமைப்பு வசதிகளே காரணமாக இருக்கின்றன. புறவழிச்சாலைகள், ரிங்ரோடு என நகரின் பல பகுதிகளை இணைக்கும் வண்ணம் நீண்டு செல்லும் சாலை பகுதியில் அமைந்த இடங்களுக்கு என்றுமே மதிப்பு அதிகம் தான் என்பது கண்கூடாக காணும் உண்மையாக இருக்கிறது.
    வளர்ச்சி பற்றிய விசாரணை
    சாலைகள், மேம்பால இணைப்பு சாலைகள் அந்த இடங்களுக்கு அருகில் வந்த பிறகே குடியிருப்புகள்  பெருகுவதற்கு ஏற்றவகையில் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. அதேவேளையில் வசிப்பிடத்தை தேர்ந்தெடுக்கும்போது இந்த சாலை வசதியை  மட்டும் கவனத்தில் எடுத்து கொள்ளாமல் இன்னும் அந்த பகுதி விரைவாக வளர்ச்சி அடைவதற்கு ஏற்ற வகையில் அடுத்தகட்ட சாலை கட்டமைப்புகள் வரவிருக்கிறதா? பள்ளிகள், மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள், தொழில் நிறுவனங்கள் அந்த பகுதியை சூழ்ந்து இருக்கிறதா? அவை தொலைதூரத்துக்கு செல்வதை தவிர்க்கும் வகையில் நமது தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யும் வகையில் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.
     முக்கியமாக பலர் தாங்கள் வேலை செய்யும் இடங்கள் சற்று தூரத்தில் இருந்தாலும் தங்கள் குழந் தைகள் படிக்கும் பள்ளிகள் அருகில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அத்துடன் எதிர்காலத்தில் அந்த பகுதியின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது பற்றியும் எடைபோட்டு பார்க்க வேண்டும். அந்த பகுதி விரைவாக மேம்பாடு அடையும் வகையில் புதிய திட்டங்கள் வரவிருக்கிறதா? என்றும் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
    சொத்து மதிப்பு ஏறுமுகம்
     ஏனென்றால் நமது தேவைக்காக சொத்து வாங்குவதாக இருந்தாலும் ரியல் எஸ்டேட்டில் செய்யும் முதலீடு சிறந்த முதலீடாகவே பார்க்கப்படுகிறது. இடமதிப்பு உயர்வு, கட்டுமான பொருட்கள் விலையேற்றம், கட்டுமான தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் சொத்து மதிப்பு உயர்வை நோக்கியே தான் இருக்கும் என்று கணிக்கப்படுவதால் கட்டமைப்பு வசதிகள் சூழ்ந்திருக்கும் இடத்தில் இருக்கும் சொத்தின் மதிப்பு மற்ற இடங்களை காட்டிலும் ஏறுமுகமாகவே இருக்கும்.
    சாலை கட்டமைப்புகளுடன் ரெயில் வசதிகள், இனி செயல்படுத்தப்பட இருக்கும் மெட்ரோ, மோனோ போன்ற ரெயில் திட்டங்கள் அந்த பகுதிகளின் மதிப்பை உயர்வுகாணச் செய்யும் காரணிகளாக இருக்கின்றன. ஆகவே சொத்து வாங்கும்போது இத்தகைய கட்டமைப்பு வசதிகள், வரவி ருக்கும் புதிய அரசு திட்டங்களை கவனத்தில் கொள்வது சொத்து மதிப்பு உயர்வுக்கு காரணமாக அமைவதோடு நகரின் முக்கிய பகுதிகளுக்கு துரிதமாக சென்றடைந்து திரும்ப ஏதுவாக அமையும்.
    வளர்ச்சி அடையும் பகுதிகள்
     அந்த வகையில் சென்னை புறநகர் பகுதிகளில் வளர்ச்சி அடைந்து வரும் பகுதிகளாக, முதலீட்டாளர்களுக்கு விருப்பமான குடியிருப்பு பகுதிகளாக பல்லாவரம்–துரைப்பாக்கம் சாலை பகுதியில் அமைந்துள்ள  இடங்கள், போரூர், திருமுடிவாக்கம், சோழிங்க நல்லூர், பெரம்பூர், நொளம்பூர், இ.சி.ஆர்., சிறுசேரி–கேளம்பாக்கம் சாலை, ஜி.எஸ்.டி.–மறைமலைநகர் சாலை, ஒரகடம்–ஸ்ரீபெரும்புதூர் சாலை பகுதியில் உள்ள இடங்கள் அமைந்திருக்கிறது என்கிறது ரியல் எஸ்டேட் ஆலோசனை துறை நிறுவனமான ரெக்ஸ் குழுமத்தின் சர்வே முடிவு.
    இந்த பகுதிகளில் அமைந்துள்ள சாலை, பஸ்–ரெயில் பயண வசதி,  கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்கள், தற்போதைய விலை, எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனங்களும் வளர்ச்சி அடையும் பகுதியிலேயே அதிகமாக குடியிருப்பு திட்டங்களை அமைத்து வருகிறார்கள்.
    முதலீட்டு பலன் கிடைக்கும்
    சொத்து வாங்கும் இடம் வளர்ச்சி அடைந்த பகுதியில் அமைந்திருக்கிறதா? எதிர்காலத்தில் வளர்ச்சி எப்படி இருக்கும்? புதிய சாலை திட்டங்கள், தொழில் சார்ந்த திட்டங்கள் வர இருக்கிறதா? என்று அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ), நகர ஊரமைப்பு இயக்கம் (டி.டி.சி.பி) அங்கீகாரம் பெற்ற சொத்துக்களை வாங்குவது சிறந்தது.
    ரியல் எஸ்டேட்டில் செய்யும் முதலீடு லாபத்தையே சம்பாதித்து தரும். நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பில்லை என்பதோடு சொந்த உடைமையாக மாறி, சொத்தை லாபத்தில் விற்க, வேறு சொத்து வாங்க, வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்ட என ஏதாவது ஒரு வகையில் முதலீட்டு பயனை கொடுக்கும் என்று ரெக்ஸ் குழுமத்தின் தலைமை ஆலோசகர் ராஜேஷ்பாபு தெரிவித்தார்

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.