ஆடம்பர வீடுகளால் அதிரும் கட்டுமானத் துறை
சென்னையின் ரியல் எஸ்டேட் சந்தை பழமை விரும்பிகள் நிறைந்ததாகப் பார்க்கப்படுகிறது. பாரம்பரியமான வீடுகளை விரும்புவோர்களும் மரபு சார்ந்த விஷயங்களின் மீது பிடிப்பு கொண்டோருமே சென்னையில் வீடு வாங்கிக் குடியேறுகிறார்கள் என்னும் நம்பிக்கை ரியல் எஸ்டேட் வட்டாரத்தில் இருந்துவருகிறது. ஆனால் சமீப காலமாக வீடுகளுக்கான சந்தையில் உருவாகிவரும் மாற்றங்கள் இந்த நம்பிக்கையைத் தகர்க்கின்றன.
முன்னணிக் கட்டுமான நிறுவனங்கள் சென்னையில் ஏராளமான ஆடம்பர வீடுகளை உருவாக்கிவருகின்றன. அடையாறு, எழும்பூர், எம்.ஆர்.சி. நகர், நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை போன்ற இடங்களில் கட்டப்பட்டுவரும் புதிய வீட்டுத் திட்டங்களே இதற்குச் சான்றுகள். இந்தத் திட்டங்களில் உருவாகிவரும் குடியிருப்புகளில் சுமார் ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. இங்கு ஒரு வீட்டின் விலை 5 முதல் 15 அல்லது 16 கோடி ரூபாய் வரை உள்ளது. இந்தத் திட்டங்களில் பெரும்பான்மையானவை வரவிருக்கும் மாதங்களில் பூர்த்திபெற்றுவிடும்.
இந்தத் திட்டங்கள் எல்லாம் நுகர்வோரால் எவ்வளவு விரும்பி வாங்கப்படும் என்பதைப் பொறுத்தே இவற்றின் வளர்ச்சி இருக்கும் என்கிறார்கள் கட்டுமானத் துறையைச் சேர்ந்த சிலர். சில திட்டங்கள் தொடங்கப்பட்டபோது ஓரளவு வாடிக்கையாளர்கள் வந்து தங்களுக்கான வீடுகளைப் பதிவுசெய்துள்ளனர். குடியிருப்புப் பகுதிகளை முற்றிலும் கட்டி முடித்துள்ள நிறுவனங்கள் அவற்றை வாடிக்கையாளர்களுக்குத் திறந்துவிடும் அதிருஷ்ட நேரத்திற்காகக் காத்திருக்கிறார்கள்.
நில உரிமையாளர்கள் சிலரும் இதைப் போன்ற குடியிருப்புகளைக் கட்டிவருகிறார்கள். முன்னணிக் கட்டுமான நிறுவனங்களும் இத்தகைய குடியிருப்புகளை உத்வேகத்துடன் உருவாக்கிவருகின்றன.
பெரும்பாலான திட்டங்களில் உருவாகும் வீடுகளை நுகர்வோர்கள் கடன் பயமின்றி வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமே. வழக்கமாகச் சென்னையில் தொழிலில் ஈடுபட்டு வரும் கட்டுமான அதிபர்கள் கூட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதையே வலியுறுத்துவார்கள். ஆனால் சமீபத்திய திட்டங்களில் ஈடுபட்டுவரும் நிறுவனங்கள் கணிசமான அளவில் தங்களைப் பணயம் வைத்து இந்தத் திட்டங்களை நிறைவேற்றிவருகின்றன. இதனால் கட்டுமானத் துறையைக் கூர்ந்து கவனிப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தனிநபர்கள்கூடத் தங்களது நிலங்களில் சொந்தமாகக் குடியிருப்புத் திட்டங்களை, அதற்கான பிரத்தியேக திட்ட மேலாண்மைக் குழுவின் உதவியுடன் நிறைவேற்றுகிறார்கள். வீட்டுத் திட்டங்களின் தொடக்க செலவுக்கான நிதியைச் சம்பாதிப்பதற்காக நுகர்வோருக்கு நல்ல தள்ளுபடியை வழங்குகிறார்கள். தி.நகர் போன்ற பகுதிகளில் சில திட்டங்களுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு தனிநபர்களைத் துணிச்சலுடன் ரியல் எஸ்டேட் துறைக்குள் இறக்கியுள்ளது.
குடியிருப்புத் திட்டங்களை ஊக்குவிக்கக்கூடிய அளவுக்கு தியேட்டர்கள், வணிக வளாகங்கள் போன்றவை அமையாவிட்டால்கூட சில ஹோட்டல்கள் இத்தகைய திட்டங்களுக்கு அனுகூலமாய் அமைந்துள்ளன. ஆடம்பர வீடுகளை உருவாக்குவதில் வீட்டின் இண்டீரியரில் பொருத்தப்படும் அதிநவீன சாதனங்கள், குளியலறையின் நவீன வசதிகள், அலங்கார விளக்குகள் போன்றவையே சவாலாக இருக்கும் அம்சங்கள். கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கும்போது பார்த்தாலே பிரமிப்பை ஏற்படுத்தும் தோற்றத்தில் வீடு அமைவது அவசியம். ஆகவே வீட்டைப் பார்த்த உடன் இதற்குக் கோடி ரூபாய் கொடுக்கலாம் என்னும் எண்ணத்தை உருவாக்கும் இண்டீரியரைத் தர வேண்டும்.
இந்த ஆடம்பர வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுபவர்கள் கோடி கோடியாய்ச் சம்பாதிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களல்ல. நமது நாட்டிலேயே வசிக்கும் உயரதிகாரிகளும், பிரபலங்களும், தொழிலதிபர்களும்தான் இங்கு வீடுகளை வாங்கத் துடிக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான். ஆனால் இந்தத் திட்டங்களைச் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டார்களை அணுக எந்தத் தடையும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.
கருத்துகள் இல்லை: