அடுக்குமாடி வீடுகளாகும் ஹோட்டல்கள்
சென்னை போன்ற மாநகரத்தில் பரந்த அளவிலான இடத்தை ஹோட்டல்களும் கார்ப்பொரேட் நிறுவனங்களும் ஆக்கிரத்து நிற்கின்றன. இதனால் அடுக்குமாடி வீடுகள் அமைக்க இடம் தேவைப்படும்போது பில்டர்களின் கவனத்திற்கு இது வருகிறது. எனவே ஹோட்டல்களை அடுக்குமாடி வீடுகளாக்க அவர்கள் எண்ணுகிறார்கள். இது மிக இயல்பான எண்ணம் இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. வர்த்தக வளாகங்களின் வாடகை சரிவதன் காரணமாகச் சில நிறுவனங்கள் கடனில் தள்ளாடுகின்றன. எனவே இத்தகைய நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களை பில்டர்கள் குறிவைக்கிறார்கள். இதனாலேயே இந்த வர்த்தகமும் வளர்கிறது. சில ஐடி நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் குறைக்க விரும்புகின்றன. எனவே அவை ஏற்கனவே கட்டப்பட்ட கட்டடங்களைக் குடியிருக்கும் வீடுகளாக மாற்றும் முயற்சியை ஆதரிக்கின்றன.
சென்னையில் உள்ள கட்டுமான அதிபர்கள் இதை சிறந்த முதலீட்டு வாய்ப்பாகக் கருதுகிறார்கள். இவர்களின் பார்வையில் முக்கியமான பல கட்டடங்கள் பதிந்துள்ளன. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தாசப்ரகாஷ் ஹோட்டலைப் பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள். இந்த ஹோட்டலில் பலர் விருப்பத்துடன் உண்டு மகிழ்ந்திருக்கலாம். இந்த ஹோட்டலை பிரின்ஸ் பவுண்டேஷன் நிறுவனம் வாங்கிவிட்டது. இது தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக மாறிக்கொண்டிருக்கிறது. 1.8 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த இடத்தில் இரண்டு நீச்சல் குளங்களும், ஒரு மேல்நிலைப்பள்ளியும், ஒரு செயற்கை நீரூற்றும், 5 படுக்கையறை கொண்ட விருந்தினர் விடுதியும் அமைக்கப்பட உள்ளது.
எழும்பூரில் உள்ள பல வணிக நிறுவனங்கள் கட்டுமான நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. எழும்பூர் பகுதியில் அடுக்குமாடி வீடுகள் சதுர அடிக்கு 9 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை விலை போகின்றன என இந்தியாப்ராபர்ட்டி.காம் இணையதளம் தெரிவிக்கிறது. வீட்டின் விலை அதன் வசதி வாய்ப்புக்கு ஏற்ப அமைந்துள்ளது.
இதே போன்று மாண்டியத் சாலையில் உள்ள ஹோட்டல் அட்லாண்டிக்கும் அடுக்குமாடி வீடாக மாறப்போகிறது. இந்த இடத்தை வாங்கியுள்ள கட்டுமான நிறுவனம் இதை 1.6 ஏக்கர் பரப்பில் அடுக்குமாடி குடியிருப்பாக மாற்றத் திட்டமிட்டுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஹோட்டல்களையும் மருத்துவமனைகளையும் அடுக்குமாடி வீடுகளாக்கத் துடிக்கின்றன கட்டுமான நிறுவனங்கள்.
கட்டுமானத் துறையின் பின்னடைவைச் சமாளிக்க கட்டுமான நிறுவனங்களுக்கு இந்த உத்தி உதவுகிறது. புதிய கட்டடத்தை ஆதியிலிருந்து தொடங்குவதைவிட ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை வீடுகளாக்குவது எளிதாக உள்ளது.
எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஜே.எம். மாரியாட் என்னும் கட்டடத்தை சீபுரொஸ் கட்டுமான நிறுவனம் 480 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டுப் புதிய கட்டடம் உருவாக்கப்படுமா கட்டடம் அப்படியே மாற்றியமைக்கப்படுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. கடலோரத்தில் அமைந்திருப்பதாலும் பள்ளிகள் அருகில் இருப்பதாலும் இந்தப் பகுதியில் வீடுகளின் விலை அதிகாகியுள்ளது. இங்கு அடுக்கு மாடி வீட்டின் விலை சதுர அடிக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
இந்தப் போக்கு சென்னையில் மாத்திரமல்ல; மும்பையிலும் காணப்படுகிறது. ஓபராய் நிறுவனம் மும்பை ஆந்தேரியில் வர்த்த நிறுவனம் ஒன்று அடுக்குமாடி வீடாக மாற்றப்பட்டுள்ளது. எனவே இந்த வகை வர்த்தகம் சென்னையின் ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கமளிக்கும் எனக் கட்டுமான நிறுவனங்கள் நம்புகின்றன.
கருத்துகள் இல்லை: