வீட்டுமனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
வீட்டுமனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
பதிவு செய்த நாள் : Feb 01 | 01:42 am
சென்னை புறநகர் பகுதிகளில் தான் வீட்டுமனைகள் வாங்குவது சாத்தியம் என்ற அளவிற்கு நகர்பகுதிகளில் மனைகளை பார்ப்பதும், அப்படி இருந்தாலும் அதை வாங்குவதும் அரியதாகவே இருக்கும் வகையில் சொத்தின் விலை மதிப்பு பட்டியல் பிரமிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
புறநகர் பகுதிகளிலும் முக்கிய இடங்கள் எல்லாம் கட்டிடங்களாக எழுந்து வரும் நிலையில் மனைகளை தேடி அந்த பகுதியையொட்டிய கிராமப்புற எல்லைகளை நாடிச்செல்ல வேண்டி இருக்கிறது. எந்த பகுதியில் மனைகள் வாங்குவதாக இருந்தாலும் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவற்றை பார்ப்போம்.
* வீட்டுமனையின் அங்கீகாரம் சி.எம்.டி.ஏ. (சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்), டி.டி.சி.பி. (நகர ஊரமைப்பு இயக்கம்) சார்ந்து இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். முக்கியமாக விவசாய நிலங்களாக இருந்த பகுதியாக தெரிந்தால் அவை குடியிருப்புகள் கட்டுவதற்காக மாற்றப்பட்டு இருக்கிறதா? அதற்கான சான்றிதழ் பெறப்பட்டு இருக்கிறதா? என்பதையும் சரி பார்க்க வேண்டும்.
* வீட்டுமனை இருக்கும் பகுதி ஊராட்சி பகுதிக்குள் வருகிறதா? அல்லது பேரூராட்சி, நகராட்சி பகுதிக்குள் அடங்கி இருக்கிறதா? அல்லது மாநகராட்சி பகுதி எல்லைக்கு உட்பட்டதா? அதற்கு ஏற்ப அங்கீகாரம் பெறப்பட்டு இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
* வீட்டுமனைகள் இருக்கும் இடம் ஏதேனும் வில்லங்கத்துக்கு உட்பட்டு இருக்கிறதா? என்பது பற்றி வில்லங்க சான்றிதழ் வாங்கி தெரிந்து கொள்வதுடன் இடத்துக்கான தாய் பத்திரம், பட்டா, கிரயப்பத்திரம், சிட்டா, நிலவரி செலுத்தியதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து கொள்வது அவசியம்.
* வீட்டுமனைகள் உள்ள இடத்தை விற்பவர் யார்? அவரை பற்றிய விவரங்களை நன்கு விசாரித்து தெரிந்து கொள்வது நல்லது. அவர் தான் இடத்தின் உரிமையாளரா? இல்லை ‘பவர் ஆப் அட்டர்னி’ உரிமை பெற்று விற்பனை செய்கிறாரா? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அந்த இடத்துக்கு உரிமை கோரும் நிலையில் உள்ளவர்களிடம் அனுமதி பெறப்பட்டு தான் விற்பனை நடக்கிறதா? என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* வீட்டுமனையின் வரைபடத்தை வாங்கி பார்ப்பதும் நல்லது.
* மனைகள் இருக்கும் பகுதியில் வசிப்பவர்களிடம் அந்த இடம் பற்றிய விவரங்களை விசாரித்து தெரிந்து கொள்வதும் நல்லது. அந்த இடத்தில் வேறு வகையில் வில்லங்கம் இருந்தாலும் அது தெரியவர வாய்ப்பு இருக்கிறது.
* வாங்கும் மனைக்கு அருகில் உள்ள இடங்களை பற்றியும் அலசி ஆராய வேண்டும். அவை நமது தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான கட்டமைப்பு வசதிகளை எந்த அளவில் பெற்றிருக்கிறது? என்பதையும் மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும். அந்த பகுதியில் எதிர்காலத்தில் அரசு செயல்படுத்த உத்தேசித்துள்ள திட்டங்கள் பற்றிய விவரங்களை சேகரித்து கொள்வதும் நல்லது.
* மனை வாங்கும் பகுதிக்கு அருகில் இடத்தின் சதுர அடி மதிப்பு எவ்வளவு? அது கடந்த சில ஆண்டுகளில் உயர்வை சந்தித்திருக்கிறதா? வரும் காலங்களில் அதன் மதிப்பு எப்படி இருக்கும்? என்பதையும் சீர் தூக்கி பார்க்க வேண்டும். அதன் தாக்கம் நாம் வாங்கும் வீட்டுமனைகள் மீதும் எதிரொலிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற பகுதியாக இருக்கிறதா? என்றும் பார்த்து கொள்ள வேண்டும்.
* முதலீடு நோக்கத்தில் வாங்குகிறோமா? உடனே வீடு கட்டும் நோக்கில் வாங்குகிறோமா? என்பதை முதலிலேயே தீர்மானித்து விட வேண்டும். வீடு கட்டி குடிபுகும் எண்ணத்தில் வாங்குவதாக இருந்தால் வளர்ந்து வரும் பகுதியை விட வளர்ச்சியில் விறுவிறு முன்னேற்றம் காணும் பகுதியை தேர்வு செய்வது சிறப்பானதாக இருக்கும்.
* வீட்டுமனைகள் ஒழுங்கு இல்லாமல், முக்கோண வடிவில் இருக்கக்கூடாது. அவை செவ்வக வடிவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
* வீட்டுமனை இருக்கும் இடத்தை தனியே ஒருமுறை சென்று பார்த்து விட்டு முடிவு எடுப்பது நல்லது. மனையை வாங்குவதற்கு முன்பணம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற சூழல் நிலவும் பட்சத்தில் குறைந்த அளவில் முன்பணம் கொடுப்பது நல்லது.
கருத்துகள் இல்லை: