சொத்து வாங்குவதற்கு முன்பு நகல் ஆவணத்தையும் சரிபாருங்கள்
எத்தனை லட்சங்கள் மதிப்பில் சொத்து வாங்கினாலும் அந்த சொத்து தொடர்பான ஆவணங்கள் சரியாக இருந்தால் தான் அது நமக்கு உரிமையை பெற்றுத்தரும். ஆவணங்களில் சிறு குறைபாடுகள் இருந்தாலும் அது சொத்து மீதான நம் உரிமையை கேள்விக்குறி ஆக்குவதாக அமைந்து விடும். ஆதலால் சொத்து வாங்கும்போது ஆவணங்கள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஆவண சரிபார்ப்பு
நாம் வாங்கப்போகும் சொத்து வீடா?, வீட்டுமனையா?, நிலமா? என்பதை பொறுத்து ஆவண சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும். எந்த ஆவணத்திலும் வில்லங்கம் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே சொத்து வாங்க வேண்டும். அதற்கு அந்த துறையில் அனுபவம் வாய்ந்தவர் களிடம் கருத்துக்களை கேட்பது நல்லது. அவர்கள் மூலம் ஆவணங்களை சரிபார்ப்பதும் சிறந்தது. ஏனெனில் பொதுவாக ஒரு சொத்து தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு பெரும்பாலும் வில்லங்க சான்றிதழ் தான் முதன்மையானதாக கருதப்படுகிறது.
அதில் எந்த ஆண்டுகளில் யார், யாரிடம் சொத்து இருந்தது? அது எப்படி கை மாறி இருக்கிறது? உள்ளிட்ட சொத்து பற்றிய விவரங்கள் இடம் பெற்று இருக்கும். அதை வைத்து மட்டுமே சொத்தின் உண்மை தன்மையை உறுதிப்படுத்தி விட முடியாது. சொத்தை விற்பனை செய்பவர்கள் தரும் ஆவணங்களையும் சரிபார்த்து உறுதிபடுத்த வேண்டும். முக்கியமாக தாய் பத்திரத்தை கண்டிப்பாக வாங்கி பார்க்க வேண்டும்.
உறுதிப்படுத்த வேண்டும்
அது ஒரிஜினல் தானா? என்பதை உறுதிபடுத்திக்கொள்வது அவசியம். ஏனெனில் அது டூப்ளிகேட் ஆவணமாக கூட இருக்கலாம். சிலரிடம் ஒரிஜினல் ஆவணங்கள் இருக்காது. டூப்ளிகேட் ஆவணம் (நகல் ஆவணம்) தான் இருப்பதாக சொல்வார்கள். அந்த ஆவணத்தை வைத்து சொத்தை விற்பனை செய்ய முற்படுவார்கள். ஆனால் இத்தகைய ஆவணங்களை பார்த்து ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது.
ஒரிஜினல் ஆவணம் எப்படி தொலைந்தது என்பதை விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் சிலர் ஒரிஜினல் ஆவணங்களை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்று இருக்கலாம். அந்த தகவலை உங்களிடம் மறைத்தும் இருக்கலாம். டூப்ளிகேட் ஆவணத்தை உங்களிடம் கொடுத்துவிட்டு ஆவணம் தொலைந்து போய் விட்டதாக கூறவும் வாய்ப்பு இருக்கிறது. வங்கியில் ஒரிஜினல் ஆவணம் அடமானம் வைக்கப்பட்டு கடன் பெற்று இருந்தால் அந்த கடனுக்கு நீங்கள் பொறுப்பாக வேண்டிய நிலை வர நேரும்.
விசாரிப்பு முக்கியம்
ஆகையால் டூப்ளிகேட் ஆவண விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். ஒருவேளை ஆவணம் தொலைந்து போனது உண்மையாக இருந்தால் அது மாயமானது பற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறதா? புகார் கொடுத்ததற்கான ரசீது உள்ளிட்ட விவரங்கள் அவர் வசம் இருக்கிறதா? ஆவணம் மாயமானது தொடர்பாக பத்திரிகை விளம்பரம் செய்யப்பட்டு இருக்கிறதா? அந்த விவரங்களை கொண்டு முறைப்படி டூப்ளிகேட் ஆவணம் வாங்கப்பட்டு இருக்கிறதா? என்று தெளிவாக விசாரிக்க வேண்டும். ஏனெனில் டூப்ளிகேட் ஆவணம் முறைகேடாக தயார் செய்யப்பட்டதாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே சொத்து வாங்குவதாக இருந்தால் ஒரிஜினல் ஆவணங்களை மட்டும் சரிபார்த்தால் போதாது. அந்த ஆவணமே உண்மை தானா என்பதை உறுதிபடுத்த வேண்டியது அவசியம்.
நகல் ஆவணம் அவசியம்
அதற்கு வாங்க இருக்கும் சொத்து பற்றிய நகல் ஆவணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் வாங்க வேண்டும். அந்த நகல் ஆவணமும், உங்களிடம் கொடுக்கப்பட்டு இருக்கும் ஆவணமும் சரியாக இருக்கிறதா? என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அந்த இரண்டு ஆவணங்களிலும் இருக்கும் தகவல்களை ஒன்று விடாமல் சரிபார்க்க வேண்டும். சர்வே எண் உள்ளிட்ட விவரங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
இடத்தின் அளவுகளும் ஒரே மாதிரிதான் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, அதில் கையெழுத்து இட்டு இருப்பவர்களின் கையொப்பம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் நகல் ஆவணத்தில் இருந்து உங்களிடம் கொடுக்கப்பட்ட ஆவணத்தில் இருக்கும் தகவல் களில் சிறு அளவில் மாறுபாடு இருந்தாலும் அது போலி ஆவணமாக தயார் செய்யப்பட்டதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
படித்து பார்க்க வேண்டும்
இந்த மோசடிகளை தவிர்க்க ஆவண சரிபார்ப்பில் அனுபவம் வாய்ந்தவர்களிடம் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் போலி ஆவணங்களை கண்டுபிடிப்பது சாதாரண விஷயமாக இருக்காது. இந்த போலி ஆவண விவகாரம் பத்திரத்துடன் நின்றுவிடுவதில்லை. பட்ட்ட, சிட்டா உள்ளிட்ட பிற சொத்து ஆவணங்களிலும் நுழைந்துவிட வாய்ப்பு இருக்கிறது.
ஆகவே சொத்து வாங்குவதாக இருந்தால் அது சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் சரிபார்ப்பதோடு, அதில் இருக்கும் விவரங்களையும் உன்னிப்பாக படித்து பார்க்க வேண்டும். சிறு கையெழுத்து மாறுபாடும் ஆவண சரிபார்ப்புக்கு உதவும். ஆகவே சொத்து வாங்குவதற்கு முன்பு நகல் ஆவணத்தை வாங்கி ஒப்பிட்டு பார்த்து இறுதி முடிவுக்கு வருவது நல்லது. பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் பெற்ற டூப்ளிகேட் ஆவணம் மூலம் சொத்து விற்கப்படுவதாக இருந்தாலும் உஷாராக இருக்க வேண்டும். வில்லங்கம் எதுவும் இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதினால் அந்த சொத்தை வாங்காமல் தவிர்ப்பது நல்லது.
கருத்துகள் இல்லை: