வீடு விற்றால் வரி கட்ட வேண்டுமா?
நாம் வருமான வரி செலுத்துகிறோம். சேவை வரி செலுத்துகிறோம். வாங்கிய வீட்டை விற்று, அதில் லாபம் கிடைத்தால் அதற்கும் வரி செலுத்த வேண்டுமா? இந்த வினாவைப் பலரும் எழுப்பியிருப்பார்கள். ஆம்,
ஒருவர் தன் வீட்டை விற்று அதன் மூலம் லாபம் ஈட்டுகிறார் என்றால், அந்த லாபத்துக்கு நிச்சயமாக வரி செலுத்த வேண்டும்.
இவ்வாறு செலுத்தப்படும் வரியை மூலதன வரி (Capital gains tax) என்கிறார்கள். இந்த வரி இரண்டு வகைப்படுகிறது. முதலாவது நீண்டகால மூலதன வரி (Long term capital gains tax). இரண்டாவது, குறுகிய கால மூலதன வரி ( Short term capital gains tax).
நீண்ட கால மூலதன வரி
ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வீட்டை, இப்போது விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதில் இருந்து கிடைக்கும் லாபத்துக்கு நீண்ட கால மூலதன லாபம் என்று பெயர். இந்தத் தொகைக்கு 20.6 சதவீதம் வரி செலுத்த வேண்டும். அதாவது 20 சதவீதம் மூலதன வரி. அதில் 3 சதவீதம் கல்வி செஸ் வரி.
குறுகிய கால மூலதன வரி
மூன்று ஆண்டுகளுக்குக் குறைவான காலத்தில் வாங்கிய வீட்டை, இப்போது விற்றால் அதிலிருந்து கிடைக்கும் லாபத்தைக் குறுகிய கால மூலதன லாபம் என்கிறார்கள். இதற்கான வரி, சாதாரணமாக ஒருவர் வருமான வரி செலுத்தினால் எந்த விகிதத்தில் செலுத்துவாரோ, அந்த விகிதத்தில் குறுகிய கால மூலதன லாப வரி செலுத்த வேண்டும்.
லாபத்தை எப்படிக் கணக்கிடுவது?
சாதாரணமாக வாங்கிய விலையில் இருந்து விற்கும் விலையைக் கழித்தால், மீதம் வருவது லாபம் என்பது அனைவரும் அறிந்ததே. நீண்டகால மூலதன லாபத்தைக் கணக்கிடுவதற்கு, இண்டக்ஸ் முறை கையாளப்படுகிறது. பண வீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இண்டக்ஸ் குறியீடு அட்டவணை தயாரிக்கப்படுகிறது. பண வீக்கம் உயர்ந்தால் விலை உயரும் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த இண்டக்ஸ் முறை 1981ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. 1981-1982 நிதியாண்டில் இண்டக்ஸ் 100 புள்ளிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அடுத்த ஆண்டு, அதாவது 1982-83ல் இண்டக்ஸ் 109 புள்ளிகளாக உயர்ந்தது. தற்சமயம் இண்டக்ஸ் 939 புள்ளிகளாக உள்ளது. கிட்டத்தட்ட 9 மடங்காக உயர்ந்துள்ளது.
உதாரணத்துக்கு ஒருவர் 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு வீடு வாங்கினார். அப்போது அதன் விலை ரூ.2 லட்சம். இப்போது அதை ரூ.25 லட்சத்துக்கு விற்கிறார். அவருக்குக் கிடைக்கக்கூடிய நீண்ட கால மூலதன லாபம் என்ன என்று பார்ப்போம்.
1990ல் இண்டக்ஸ் புள்ளிகள் 182.
வாங்கிய விலை ரூ.2 லட்சம்.
தற்போதைய இண்டக்ஸ் புள்ளிகள் 939.
விற்ற விலை ரூ.25 லட்சம்.
கிடைக்கக்கூடிய லாபம்
ரூ.2,00,000 * 939 / 182 = ரூ.10,31,868
பணவீக்கம் சார்ந்த விலை = ரூ.10,31,868
நீண்ட கால மூலதன லாபம்
25,00,000 - 10,31,868 = ரூ.14,68,132
இணையதளங்களில் இதற்கான கால்குலேட்டர்கள் உள்ளன. இதன் வாயிலாக மூலதன லாபத்தை நீங்கள் எளிதில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லது தேவையானால் ஒரு பட்டயக் கணக்காளரை (சார்டட் அக்கவுண்டண்ட்) அணுகி அவரது உதவியைப் பெறலாம். இதற்கான படிவத்தை வருமான வரித்துறைக்குச் சமர்ப்பிப்பதற்கும் அவர் உதவியாக இருப்பார்.
புது வீட்டுக்கு வரியில்லை
உங்கள் பழைய வீட்டை விற்றதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய நீண்ட கால மூலதன லாபத்தைக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்குள், புதிய வீடு வாங்கினால் மூலதனத்துக்கு எவ்வித வரியும் செலுத்த வேண்டியதில்லை. உதாரணத்துக்கு உங்களுக்கு ரூ.22 லட்சம் நீண்டகால மூலதன லாபம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் ரூ.20 லட்சத்துக்குப் புதிய வீடு வாங்குகிறீர்கள். மீதமுள்ள 2 லட்சத்துக்கு நீங்கள் 20.6 சதவீதம் வரி செலுத்தினால் போதுமானது. ஒரு நிபந்தனை. புதிதாக வாங்கிய வீட்டை 3 ஆண்டுகளுக்குள் விற்கக்கூடாது.
வரியைத் தவிர்க்கவும் வாய்ப்பு
உங்களுடைய நீண்ட கால மூலதன லாபத்தில் நீங்கள் புதிய வீடு வாங்க விரும்பவில்லை. வரி கட்டுவதையும் தவிர்க்க விரும்பினால் அதற்கும் ஒரு வழிமுறை உள்ளது. உங்களுக்குக் கிடைத்த மூலதன லாபத்தைத் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் (என்.ஹெச். ஏ.ஐ.)
அல்லது ஊரகப் பகுதி மின்னுற்பத்திக் கழகம் (ஆர்.இ.சி.) முதலீடுத் திட்டங்களில் 6 மாதங்களுக்குள் முதலீடு செய்தீர்களேயானால் வரி செலுத்த வேண்டியதில்லை. ஒரு நிபந்தனை என்னவெனில் 3 ஆண்டுகளுக்கான முதலீடாக அது இருத்தல் வேண்டும்.
எஸ்.கோபாலகிருஷ்ணன், வங்கி முன்னாள் அதிகாரி - தொடர்புக்கு: sgkrishnan1931@gmail.com
கருத்துகள் இல்லை: