பார்த்துப் பார்த்துச் செலவு செய்து பட்ஜெட் வீடு கட்டுபவர்களுக்கு ஒவ்வொரு கூடுதல் செலவும் சுமையாகவே இருக்கும்
ரசனைக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ப ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்பது இன்று பெரும்பாலானவர் களின் கனவு. சிறிய வீடோ, பெரிய வீடோ, ஆடம்பர வீடோ, சொகுசு வீடோ எதுவாக இருந்தாலும் தங்கள் விருப்பப்படி கட்டவேண்டும் என்பதே வீடு கட்டுபவர்களின் விருப்பமாக இருக்கும். அந்த விருப்பம் நிறைவேற வேண்டுமானால் ரசனையாக வீட்டை வடிவமைப்பது அவசியம்.
வசதி படைத்தவர்கள் தங்கள் ரசனைக்கேற்பக் கட்டிட வடிவமைப்பை ஆர்க்கிடெக்ட் மூலமாக உருவாக்கி, ஒரு தேர்ந்த பொறியாளரின் ஆலோசனையின்படி கட்டிடப் பணியைத் தொடங்கிவிடுவார்கள். பார்த்துப் பார்த்துச் செலவு செய்து பட்ஜெட் வீடு கட்டுபவர்களுக்கு ஒவ்வொரு கூடுதல் செலவும் சுமையாகவே இருக்கும். இதற்காக அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஆட்டோகேட் மென்பொருள் உதவியுடன் நம் கனவு இல்லத்தை வடிவமைக்கலாம். அதற்கு ஹோம்ஸ்டைலர் என்ற இலவச ஆன்லைன் சேவை வழிகாட்டுகிறது.
இதற்கான இணைய தளத்தில் கனவு இல்லத்தை வடிமைத்துப் பார்க்கப் பொறியியல் அறிவு பெரிதாகத் தேவையில்லை. ஆட்டோகேட் பயிற்சி இருந்தால் போதும். இல்லாவிட்டாலும் பிரச்சினையில்லை. இந்தத் தளத்தில் நுழைந்தவுடன், நம் வீட்டுத் திட்டத்தைப் புதிதாக வடிவமைக்க வேண்டுமா அல்லது ஏற்கனவே உள்ள டிசைன்களில் இருந்து எடுக்க வேண்டுமா என்பதைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த டிசைன்களை 2டி திரையில் ஃப்ளோர் பிளானை உருவாக்கி 3டி வடிவில் பார்க்க வசதி உள்ளது. தேவையான 3டி மாடல்களைப் பயன்படுத்தி நம் எண்ணத்திற்கு ஏற்ப வீட்டை அழகுபடுத்திப் பார்த்து நம் விருப்பமான மாடலைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
ஃப்ளோர் டைல்ஸ், கார்பெட் மற்றும் சுவர் வர்ணம் ஆகியவற்றை நம் விருப்பத்திற்கு ஏற்பத் தேர்வு செய்து வடிவமைக்கலாம். மேலும் நமது திட்டத்தை மற்றவர்களுக்கு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிக் கருத்துகளையும் கேட்டு முடிவு எடுக்க இந்த ஆன்லைன் சேவையில் வசதி உள்ளது.
புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு http://www.homestyler.com/designer என்ற இந்த இலவசச் சேவை மிகவும் பயனளிப்பதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை: