குறைந்த விலை குடியிருப்பு திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு துறை அந்தஸ்து வழங்க மத்திய அரசு பரிசீலனை
குறைந்த விலை குடியிருப்பு திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு துறை அந்தஸ்து வழங்க மத்திய அரசு பரிசீலனை
ரவி தேஜா சர்மா
புதுடெல்லி
அனைத்து வகை குடியிருப்புகளுக்கும் உள்கட்டமைப்பு துறை அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விரும்புகின்றன. ஆனால் மத்தியில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாரதீய ஜனதா அரசு குறைந்த விலை குடியிருப்பு திட்டங்களுக்கு மட்டும் இந்த அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நீண்ட கால கடன்
குறைந்த விலை குடியிருப்புகளுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து கிடைக்கும் பட்சத்தில் அந்தப் பிரிவில் கவனம் செலுத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு நீண்ட கால கடன் வசதி கிடைக்கும். இத்துறைக்கு கடன் வழங்குவதில் பொதுவாக வங்கிகளுக்கு இருக்கும் தயக்கம் நீங்கி விடும்.
மத்திய அரசு விதிமுறைகளின்படி 40 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இல்லங்களே குறைந்த விலை வீடு ஆகும். பாரதீய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் ஏராளமான குறைந்த விலை குடியிருப்பு திட்டங்களை உருவாக்கப் போவதாக தெரிவித்தது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதற்கு ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் உள்ளன. அப்போது ஒவ்வொரு குடும்பமும் முறையான, பாதுகாப்பான சொந்த வீடு ஒன்றை பெற்றிருக்க வேண்டும் என்பது அக்கட்சியின் பிரதான நோக்கங்களில் ஒன்றாக உள்ளது.
தேசிய வீட்டு வசதி வங்கியின் அண்மைக் கால ஆய்வறிக்கை ஒன்றின்படி, நகர்ப்புறங்களில் தற்போது 1.88 கோடி வீடுகளுக்கு பற்றாக்குறை உள்ளது. இவற்றுள் 95 சதவீத இல்லங்கள் குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்குத்தான் தேவையாக உள்ளது. இந்நிலையில், நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடு குறைந்த விலை குடியிருப்பு திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து விரைவில் முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது.
வரி, வட்டி சலுகைகள்
குறைந்த விலை குடியிருப்புகளுக்கு உள்கட்டமைப்பு துறை அந்தஸ்து என்பது ரியல் எஸ்டேட் துறையின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. எனினும், நீண்ட கால கடன் வசதி அளிப்பது பெரிய அளவில் இத்துறைக்கு உதவாது. உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கும்போது வரி விதிப்பு மற்றும் வட்டி விகிதங்களில் சலுகை போன்ற அம்சங்களையும் மத்திய அரசு பரிசீலனை செய்தால்தான் நல்ல பலன் கிடைக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
கருத்துகள் இல்லை: