தமிழக ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு 75 சதவீதம் வீழ்ச்சி
தமிழக ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு 75 சதவீதம் வீழ்ச்சி
சென்னை:கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழக ரியல் எஸ்டேட் துறையில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடு, 75 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்துள்ளது என, "அசோசெம்' அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மந்த நிலை:மனை, வீடு உள்ளிட்டவற்றை குறிக்கும் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி, தமிழகத்தை பொறுத்தமட்டில், கடந்த இரண்டு ஆண்டு களாக, மந்தமாகவே இருந்து வருகிறது.இதுகுறித்து, "அசோசெம்' அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை விவரம்:கடந்த, 2011-12ம் நிதியாண்டில், தமிழக ரியல் எஸ்டேட் துறையில், 13,600 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டது. இது, சென்ற, 2012-13ம் நிதியாண்டில், 75 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்து, 3,300 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
எனினும், சென்ற நிதியாண்டில், நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் துறையில் ஈர்க்கப்பட்ட புதிய முதலீடுகளில், தமிழகம், 8 சதவீத பங்களிப்புடன், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.கடந்த, 2011-12ம் நிதியாண்டில், இந்தியா முழுவதும், ரியல் எஸ்டேட் துறையில், 92,600 கோடி ரூபாய் அளவிற்கு, புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இது, சென்ற, 2012-13ம் நிதியாண்டில், 50 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சி கண்டு, 42 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
புதிய முதலீடுகள்:நாட்டின் பல மாநிலங்களில், ரியல் எஸ்டேட் துறையில் புதிய முதலீடுகள் குறைந்துள்ள நிலையில், குஜராத்தில் புதிய முதலீடு வளர்ச்சி கண்டுள்ளது.சென்ற நிதியாண்டில், குஜராத் மாநில ரியல் எஸ்டேட் துறையில், புதிய முதலீடு, 700 சதவீதம் வளர்ச்சி கண்டு, 17 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய, 2011-13ம் நிதிஆண்டில், வெறும், 2,000 கோடி ரூபாய் என்ற அளவிற்கே இருந்தது.
இதே போன்று, கேரள ரியல் எஸ்டேட் துறையிலும், புதிய முதலீடு, 550 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டு உள்ளது. அடுத்த இடங்களில், உத்தரகாண்ட் (400 சதவீதம்), ராஜஸ்தான் (175 சதவீதம்) ஆகியவை உள்ளன.அதே சமயம், இதர மாநிலங்களின் ரியல் எஸ்டேட் துறையில், புதிய முதலீடுகளின் வளர்ச்சி, 50 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவைக் கண்டுள்ளது.
சென்ற நிதியாண்டில், இந்திய ரியல் எஸ்டேட் துறையில், புதிய முதலீடுகளை ஈர்த்த முன்னணி மாநிலங்களில், குஜராத், அதிகபட்சமாக, 41 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளது.மகாராஷ்டிராஅடுத்த இடங்களில், மகாராஷ்டிரா (17 சதவீதம்), கர்நாடகா (10 சதவீதம்), தமிழகம் (8 சதவீதம்) மற்றும் உத்தர பிரதேசம் (6 சதவீதம்) ஆகியவை உள்ளன.
சென்ற நிதியாண்டு நிலவரப்படி, இந்திய ரியல் எஸ்டேட் துறையில், மொத்தம், 14 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் நிலுவையில் உள்ளன. இதில், மகாராஷ்டிரா, 20 சதவீத பங்களிப்புடன் முதலிடத்திலும், குஜராத், 15 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.நாடு முழுவதும், பல்வேறு பொதுத் துறை மற்றும் தனியார் துறைகளில், மொத்தம், 122 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் நிலுவையில் உள்ளன. இதில், ரியல் எஸ்டேட் துறையின் பங்களிப்பு, 11 சதவீதமாக உள்ளது.
மகாராஷ்டிரா, குஜராத், அரியானா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களின் ரியல் எஸ்டேட் துறை, அதிகபட்ச முதலீடுகளை நிலுவையில் கொண்டுள்ளன.
தமிழகம்:சென்ற நிதியாண்டு நிலவரப்படி, தமிழக ரியல் எஸ்டேட் துறையில், 88,600 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இது, நாட்டின் ஒட்டு மொத்த ரியல் எஸ்டேட் துறை சார்ந்த முதலீட்டு நிலுவையில், 6 சதவீதம் ஆகும்.கடந்த, 2008-2013 மார்ச் வரையிலான ஐந்துஆண்டுகளில், நாட்டில்பல்வேறுதுறைகளில், நிலுவையில் உள்ள முதலீடுகள் பிரிவின் வளர்ச்சி, 25 சதவீதமாக உள்ளது. இது, தமிழகத்தில், 22 சதவீதம் என்ற அளவில் உள்ளது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை: