ஆயிரங்களில் லட்சங்களை காக்கலாம்! வீட்டுக் கடன் காப்பீடு...
வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டுவது பெரிய விஷயமில்லை. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருந்தால்தான் கட்டிய வீட்டில் நிம்மதியாக காலத்தைக் கழிக்க முடியும். இது தொடர்பாக திருவாரூரைச் சேர்ந்த காப்பீடு ஆலோசகர் ஸ்ரீனிவாசனிடம் பேசினோம்.
''வீட்டுக் கடன் வாங்கும்போதே அதை எப்படி, எந்தெந்த வழிகளில் திருப்பிச் செலுத்தப் போகிறோம் என்பதை திட்டமிட்டுவிட வேண்டும். எதிர்பாராத விதமாக வீட்டுக் கடன் வாங்கியவரின் வருமான ஆதாரம் தடைபட நேர்ந்தாலோ அல்லது வீட்டுக் கடன் வாங்கியவர் இறக்க நேர்ந்தாலோ அவரது வாரிசுகளுக்கு ஏற்படும் பொருளாதார இடர்களால் வீட்டுக் கடனை கட்ட முடியாத நிலை ஏற்படலாம்.
இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்க்க வீட்டுக் கடனோடு ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க வங்கிகள் பரிந்துரை செய்கின்றன.
வீட்டுக் கடன் வாங்கும்போதே, ஆயுள் காப்பீடு பாலிசிக்கான பிரீமியத்தை வீட்டுக் கடனோடு சேர்த்து கடனாக வாங்கிக்கொள்ள முடியும். வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரை காப்பீடு காலமாக கணக்கிடப்பட்டு, வீட்டுக் கடன் குறையக் குறைய பாலிசி கவரேஜ் தொகையும் குறைந்துகொண்டே வருவதுபோல் இந்த பாலிசி அமைக்கப்பட்டிருக்கும்.
பொதுவாக வீட்டுக் கடன் நிறுவனங்கள் காப்பீடு நிறுவனங்களோடு இணைந்து பாலிசியின் பிரீமியத்தைக் கணக்கிட்டு வீட்டுக் கடனோடுச் சேர்த்து கடன் தொகையை கணக்கிட்டுவிடுகின்றன. வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தும்போது, பிரீமியத்தைக் கடனோடுச் சேர்க்காமல் மாதாமாதம் செலுத்தும் வசதியும் இருக்கிறது.
பொதுவாக, 20 லட்ச ரூபாய் வீட்டுக் கடனுக்கு பாலிசி எடுக்கும்போது, அதே அளவு ஆயுள் காப்பீடும் (டேர்ம் பிளான்) எடுக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது. கடனைத் திருப்பிச் செலுத்த இருபது வருடங்கள் திட்டமிட்டால், பாலிசியின் பிரீமியம் ஒரே தடவை கட்டுவதாக இருக்கும்பட்சத்தில், சுமார் 70 முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை வரும். இதுவே ஆண்டு பிரீமியமாகக் கட்ட திட்டமிட்டால், வருடத்திற்கு 3,000 முதல் 5,000 ரூபாய் வரை பிரீமியம் தொகை கட்ட வேண்டியிருக்கும். இப்படி கணக்கிடப்பட்ட பிரீமியத் தொகை வீட்டுக் கடனோடுச் சேர்க்கப்பட்டு, அதற்கேற்ப வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தும் தொகை (இ.எம்.ஐ.) கணக்கிடப்படும்.
வீட்டுக் காப்பீடு!
எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் வீட்டிற்கு சேதம் ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு பெறும்விதமாக காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது. இந்த பாலிசியை நாம் பொதுக் காப்பீடு நிறுவனங்களிடம் தனியாகவும் எடுத்துக்கொள்ளலாம். வீட்டுக் கடனோடுச் சேர்த்தும் எடுத்துக் கொள்ளலாம். வீட்டுக் கடனோடு இதற்குரிய பிரீமியத்தையும் சேர்த்து திரும்பக் கட்டலாம். இயற்கை பேரிடர்களான மழை, புயல், தீ விபத்துகளால் வீடு பாதிப்படையும்பட்சத்தில் இந்த பாலிசி மூலம் இழப்பீடு பெற்று வீட்டை சீர் செய்ய முடியும். பொதுவாக, இந்த காப்பீட்டை வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமே வீட்டின் பேரில் எடுத்துவிடும்.
வீட்டு கட்டடத்தின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் என்கிறபோது, ஆண்டு பிரீமியம் சுமார் 3,000 முதல் 4,000 ரூபாயாக இருக்கும். இதனுடன் பூகம்ப பாதிப்பு, தீவிரவாத பாதிப்பு போன்றவற்றுக்கான ரைடர் பாலிசிகளும் கிடைக்கிறது'' என்றார் ஸ்ரீனிவாசன்.
வீட்டுக் கடன் வாங்குபவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அல்லது வீட்டுக்குப் பாதிப்பு என்றால், இந்த பாலிசிகள் நிச்சயம் கை கொடுக்கும். சில ஆயிரங்கள் மூலம் பல லட்சங்களைக் காப்பாற்ற முடியும் என்கிறபோது இந்த பாலிசியை எடுக்க ஏன் இன்னும் தயக்கம்?
கருத்துகள் இல்லை: