கட்டுமானத்தில் இருக்கும் வீட்டை வாங்கப்போறீங்களா?
கட்டுமானத்தில் இருக்கும் வீட்டை வாங்கப்போறீங்களா?
சென்னை போன்ற நகரப்பகுதிக்குள் சொந்த வீட்டை அமைப்பது என்பது பலருக்கு சவாலான காரியமாக தான் இருக்கிறது. முக்கிய நகர் பகுதிகளில் எல்லாம் குடியிருப்புகள் பெருகி விட்ட நிலையில் புறநகர் பகுதிகளை நாடி செல்வது தவிர்க்க முடியாததாகி விட்டது. அங்கும் வீட்டு மனை வாங்கி வீடு கட்டுவதற்கு சாத்தியமில்லாத நிலைமை தான் பல பகுதிகளில் நிலவுகிறது.
நிதி ஆதாரம்
ஏனெனில் வீட்டுமனை வாங்குவதற்கே லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டிய நிலையில் அதில் வீடு கட்டி குடியேறுவது எளிதான விஷயமாக பலருக்கு அமைந்து விடுவதில்லை. வீடு கட்டுவதற்கு தேவையான பணம் திரட்டுவது, கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து வருவது, கட்டுமான பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல விஷயங்கள் வீட்டு உரிமையாளர்களை நேரடியாக களம் இறங்க செய்ய முடியாத நிலைக்கு தள்ளிவிடுகிறது. வீடு கட்டுவது சம்பந்தமாக முழுமூச்சாக அலைந்து திரிய வேண்டி இருப்பதும் பலரால் முடியாததாக இருக்கிறது.
அதிலும் பணியில் இருப்பவர்கள் தனியாக நேரம் ஒதுக்கி வீட்டு வேலையை தாமே பொறுப்பில் இருந்து கவனிப்பது இயலாத விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க வீட்டு மனை வாங்குவதற்கே லட்சக்கணக்கில் பணம் திரட்டுவது கடினமானதாக இருக்கும்போது அதில் வீட்டையும் சொந்தமாக எழுப்ப முயற்சிக்கையில் நிதி ஆதாரம் நிலைகுலைய வைப்பதாக இருக்கிறது. ஒரே சமயத்தில் லட்சக்கணக்கில் ரூபாயை செலவழிக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தி விடுகிறது. அது எல்லோராலும் எளிதில் முடியாததாகவே இருக்கிறது.
வீட்டை தேர்ந்தெடுக்கும் விதம்
அதனால் வீட்டுமனை வாங்கி தாமே வீடு கட்டுவதை விட கட்டப்பட்டு இருக்கும் வீடுகளை வாங்கவே பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். தமக்கு தேவையான வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் அந்த வீடு அமையுமானால் அதை வாங்குவதற்கு முனைப்பு காட்டுகிறார்கள். அதிலும் கட்டிய வீட்டை காட்டிலும் கட்டுமானம் நடந்து கொண்டிருக்கும் வீட்டை வாங்குவது பலருடைய விருப்பமாக இருக்கிறது. தாங்கள் எதிர்பார்க்கும் கட்டமைப்பு வசதிகள் சூழ்ந்த பகுதியில் அந்த கட்டுமான திட்டம் அமைவதாக இருந்தால் அந்த குடியிருப்பில் வீட்டை தேர்வு செய்ய அதிக ஆர்வம் காட்டுபவர்கள் இருக்கிறார்கள்.
முக்கியமாக பணிக்கு சென்று திரும்புவதற்கு ஆகும் நேரம் குறைவாக இருக்கும் வகையில் சாலை வசதிகள் பெற்ற பகுதியில் நடைபெறும் கட்டுமான வீட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் படிப்பதற்கு ஏதுவாக பள்ளிக்கூடமும் அருகிலேயே அமைந்திருக்குமானால் தங்களது சவுகரியங்களை துறந்து குழந்தைகளுக்காக வீட்டை தேர்வு செய்பவர்களும் இருக்கிறார்கள். இத்தகைய வசதி வாய்ப்புகளை கருத்தில் கொண்டு கட்டுமான வீட்டை தேர்வு செய்வதிலும் பல நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது.
மாற்றங்கள் செய்ய வாய்ப்பு
முக்கியமாக கட்டிய வீட்டை காட்டிலும் கட்டுமான பணியில் இருக்கும் வீட்டில் நம் தேவைக்கேற்ப மாற்றங்களை செய்ய முடியும். வரவேற்பறையில் டி.வி., ஷோகேஸ் அமையும் இடங்களில் நமது ரசனைக்கேற்ப சிறு சிறு மாறுதல்களை புகுத்துவதற்கு ஏதுவாக இருக்கும். பெண்களின் பிரதான அறையான சமையல் அறையையும் அவர்களின் புழக்கத்துக்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ள வசதியாக இருக்கும். சமையல் மேடையை அவர்களின் உயரத்துக்கு ஏற்ப அமைக்க சொல்லலாம்.
அலமாரிகள் எந்த இடத்தில் இருந்தால் வசதியாக இருக்கும். அதில் பொருட்கள் வைப்பதற்கு ஏற்ப எத்தகைய மாற்றங்கள் செய்தால் ஏதுவாக இருக்கும் என்பதையும் தீர்மானிக்கலாம். மேலும் சமையல் அறையின் காற்றோட்ட வசதியை கணக்கிட்டு அதற்கேற்ப சிம்னி, எக்ஸாஸ்ட் பேன் பொருத்தும் வசதியை உருவாக்கி கொள்ளலாம். இவையெல்லாம் வீடு கட்டுமானத்தின் தொடக்க நிலையில் இருக்கும் பட்சத்தில் கட்டுமான வரைபடத்தில் சிறுசிறு மாறுதலை செய்வதற்கு வசதியாக இருக்கும்.
விலை குறைவாக இருக்கும்
நமது மனதுக்கு பிடித்த பெயிண்டிங், ஜன்னல், கதவுகள் போன்றவை தேர்வு செய்ய வாய்ப்பு இருக்குமானால் அதையும் செயல்படுத்தி பிடித்தமான வீடாக வாங்க முடியும். அதைவிட சாதகமான ஒரு விஷயம் இருக்கிறது. கட்டுமான திட்டம் தொடங்க இருக்கும் நிலையில் வீட்டை புக் செய்யும் போது சதுர அடி விலை குறைவாகவே இருக்கும். அதிலும் தொடக்க விழா சலுகையாக பல நிறுவனங்கள் சதுர அடி விலையை குறைத்து விற்பனையும் செய்கின்றன. அந்த நேரத்தில் வீட்டை தேர்வு செய்வது ஆதாயம் தருவதாக இருக்கும்.
ஏனெனில் வீடு கட்டி முடிக்கப்படும் சமயத்தில் நாம் புக்கிங் செய்த சதுர அடி விலையை விட விலை மதிப்பு உயர்ந்து தான் இருக்கும். நாம் ஆரம்பத்திலேயே புக்கிங் செய்யும்போது அது லாபம் தருவதாக அமையும். அதேவேளையில் குடியிருப்பு கட்டி முடிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வீட்டை ஒப்படைப்பதாக சொல்லியிருக்கும் கால அளவிற்குள் கட்டுமான பணிகளை முடித்து கொடுத்து விடுவார்களா? என்பதையும் தீவிர விசாரிக்க வேண்டும்.
இதற்கு முன்பு அந்த கட்டுமான நிறுவனம் கட்டிய குடியிருப்புகள் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டிமுடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். வீடு வாங்குவதற்கு வங்கி கடன் வாங்கி அதற்கு மாத தவணையும் செலுத்தி வாடகை வீட்டில் வசிக்கும் பட்சத்தில் கூடுதல் நிதிச்சுமையை சந்திக்க நேரிடும். ஆதனால் கட்டுமானத்தில் இருக்கும் வீடு நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் விரைவாக கட்டிமுடிக்கப்பட்டு ஒப்படைக்கப்படுமா? என்பதை தெளிவுபடுத்தி கொள்வது நல்லது
கருத்துகள் இல்லை: