சொந்த வீட்டு கனவை நனவாக்கும் முதலீடு திட்டங்கள்
சொந்த வீட்டு கனவை நனவாக்கும் முதலீடு திட்டங்கள்
வீடு கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்து வந்தால் அதை விரைவாக்குவதற்கு திட்டமிடல் மிக முக்கியம். அத்துடன் சேமிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் வீடு கட்ட வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. ஆகையால் கையிருப்பில் பணத்தை சேமித்து வந்தால் தான் வீடு கட்டுவது விரைவாக சாத்தியமாகும்.
சேமிப்பு கைகொடுக்கும்
ஏனென்றால் ஒரே சமயத்தில் பெரும் தொகையை திரட்டுவது என்பது எல்லோராலும் முடியாத காரியமாகவே இருக்கிறது. ஆனால் சேமிப்பு பழக்கம் வீட்டுக்கனவுக்கு கைகொடுக்கும். சொந்த வீடு கனவில் இருப்பவர்கள் மாத வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பிற்காக ஒதுக்க வேண்டும்.
அது தான் கனவு இல்லத்துக்கு முதல் விதையாக இருக்கும். சிறுக, சிறுக சேமித்து வருவது குறிப்பிட்ட காலத்தில் கணிசமான தொகையை பெற்றுத்தரும். அதற்கு மாத பட்ஜெட் போடுவது இன்றியமையாதது. ஒவ்வொரு மாதம் எவ்வளவு செலவு ஆகிறது என்பதை குறிப்பெடுத்து வந்தால் போதும்.
தொகை உயரும்
வீட்டு தேவைக்கு ஆகும் தொகையை தனியே கணக்கிட்டு விடலாம். மீதி தொகையை சேமிப்புக்கு ஒதுக்குவதற்கு ஏதுவாக இருக்கும். அந்த சேமிப்பிலும் அத்தியாவசிய தேவை, இதர இனங்களுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள தொகையை கனவு இல்ல சேமிப்பு கணக்கில் சேர்த்துவிட வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் அவ்வாறு கனவு வீட்டுக்கு ஒதுக்கப்படும் சேமிப்பு தொகை கணிசமாக உயர்வை நோக்கியே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓரளவு தொகையை சேமிப்பின் மூலம் பெற முடியும். அந்த தொகை வீடு வாங்குவதற்கு, கட்டுவதற்கு ஏதாவது ஒரு வகையில் பலன் கொடுப்பதாக அமையும்.
முதலீடு திட்டம்
உதாரணத்துக்கு வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குவதாக இருந்தாலும் முழுத்தொகையையும் வங்கிகள் கடனாக கொடுக்காது. மாத வருமானத்தை கணக்கிட்டு அதன் அடிப்படையிலேயே கடன் தொகை நிர்ணயிக்கப்படுவதாக இருக்கும். மேலும் சுமார் 20 சதவீத தொகையை நாம் கையில் இருந்து செலுத்த வேண்டி இருக்கும். இது ‘மார்ஜின் மணி’ எனப்படும். ஆகவே இந்த மார்ஜின் மணியை செலுத்துவதற்கு இந்த சேமிப்பு உதவும். சிலர் சேமிக்கும் பணத்தை ‘பண்டு’ திட்டங்களில் முதலீடு செய்வார்கள்.
அதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் கணிசமான தொகையை சம்பாதிப்பதற்கு முனைப்பு காட்டுவார்கள். அதிலும் மாத வருமானம் ரூ.30 ஆயிரத்துக்கு மேல் இருப்பவர்களில் சொந்த வீடு ஆசையில் உள்ளவர்கள் வருமானத்தின் பெரும்பகுதியை சேமிப்பதற்கு ஒதுக்கு பவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு மாதமும் கணிசமாக ஒரு தொகையை சேமித்து வந்தால் ஓரிரு ஆண்டுகளில் ஓரளவு பணம் சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தில் மாத வருமானத்தை கணக்கிடுவார்கள். அவர்கள் மாதம் ரூ.20 ஆயிரம் ரூபாயை சொந்த வீட்டுக்கனவுக்காக சேமிப்பதாக இருந்தால் அந்த சேமிப்பு தொகையை முதலீடு பக்கம் திருப்பலாம்.
வட்டி உயர்வு முதலீடு
அதிலும் குறிப்பாக ‘பேலன்ஸ் பண்டு’ திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் 14 சதவீதம் வரை ஆண்டு வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ‘பேலன்ஸ் பண்டு’களில் செய்யும் முதலீடு லாபம் தருவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்த முதலீடு திட்டங்களின் சந்தை மதிப்பு ஏறுமுகமாக தான் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஆதலால் கணிசமான தொகையை முதலீட்டின் மூலம் பெறுவதற்கு ஏதுவாக ‘பேலன்ஸ் பண்டு’ முதலீடு அமைய வாய்ப்பு இருக்கிறது. முதலீட்டுக்கான மாத தொகையான 20 ஆயிரம் ரூபாயை ஒரே நிறுவன ‘பேலன்ஸ் பண்டு’ திட்டத்தில் முதலீடு செய்யாமல், மற்ற நிறுவனங்களின் பண்டுகளிலும் தொகையை பிரித்து செலுத்தலாம். இது கூடுதல் லாபத்தை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.
கவனிக்க வேண்டும்
ஏனெனில் மாதம் ரூ.20 ஆயிரம் முதலீடு தொகைக்கு 14 சதவீதம் ஆண்டு கூட்டு வட்டி வருமானத்தை கணக்கிட்டால் கூட ஓரளவு கணிசமான தொகையை எதிர்பார்க்கலாம். எனினும் பங்கு சந்தைகளின் ஏற்ற, இறக்க நிலவரங்களை கவனித்து அதற்கேற்ப முதலீடு செய்து வர வேண்டும். ஏனென்றால் முதலீடு மூலம் கிடைக்கும் வருமானம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் சொந்த வீட்டு கனவை விரைவாக்கி விட முடியும்.
ஒரு சில ஆண்டுகள் காத்திருந்தால் போதும். வீடு கட்டுவதற்கு ஆகும் தொகையில் பெரும் பகுதியை முதலீட்டின் மூலம் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கு முதலீடு செய்யும் தொகையும் அதிகமாக இருக்க வேண்டும். அவை நல்ல முதலீடு திட்டங்களாகவும் இருக்க வேண்டும். ஆகவே பங்கு சந்தை நிலவரங்களை கவனித்து வருவது முதலீட்டுக்கு ஏற்புடையதாக அமையும்.
கருத்துகள் இல்லை: